தமிழக செய்திகள்

லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து - 13 பேர் படுகாயம்

பஸ்சில் இருந்த டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் உள்பட 13 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

செங்கல்பட்டு,

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் இருந்து சென்னை நோக்கி இன்று காலை அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். மதுராந்தகம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளபிரான்புரம் என்ற இடத்தில் வந்த போது அரசு பஸ்சின் முன்னால் இரும்பு கம்பிகளை ஏற்றிய லாரி சென்று கொண்டு இருந்தது. திடீரென லாரி டிரைவர் பிரேக் போட்டதால் பின்னால் வந்த அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பக்கம் பயங்கரமாக மோதியது.

இதில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்து நொறுங்கியது. பஸ்சில் இருந்த டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் உள்பட 13 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய லாரி,பஸ்சை அப்புறப்படுத்தினர். மேலும், காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.