கள்ளக்குறிச்சி,
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் அரசுப் பேருந்து ஒன்று கள்ளக்குறிச்சி நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தானது நேற்று அதிகாலை 4 மணியளவில் சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் கிராமத்தின் வழியாக சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தறிகெட்டு ஓடி, மூரார்பாளையம் மணிமுக்தாறு மேம்பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதியது. மேலும் மோதிய வேகத்தில், மேம்பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு பேருந்து அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் உயிர்பயத்தில் கூச்சலிட்டனர்.
இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமடைந்தாலும், பயணிகள் அனைவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு, அதில் பயணிகள் கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.