தூத்துக்குடி,
தூத்துக்குடியில் அரசு மருத்துவமனை மயக்கவியல் மருத்துவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி பிரையண்ட்நகர் 3-வது தெரு மத்திய பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் நவநீதபிரபு (வயது 38). இவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மயக்கவியல் துறையில் அரசு மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு பூர்ணிமா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நேற்று மதியம் இவரது மனைவி பூர்ணிமா குழந்தைகளுடன் தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், மாலையில் நவநீதபிரபு தனது மனைவி பூர்ணிமாவுடன் செல்போனில் வீடியோ கால் செய்து பேசியுள்ளார். அப்போது தான் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறியுள்ளார். இதனால் பதற்றமடைந்த பூர்ணிமா, உடனடியாக நவநீதபிரபுவுடன் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சக மயக்கவியல் மருத்துவர் அருள்செல்வத்திற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
அருள்செல்வம் மற்றும் சக மருத்துவர்கள் பிரையண்ட்நகரில் உள்ள நவநீதபிரபுவின் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், கிரில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு நவநீதபிரபு வீட்டிலிருந்த சேலையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தென்பாகம் போலீசார், நவநீதபிரபுவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.