தமிழக செய்திகள்

4 நாட்களாக நடந்து வந்த அரசு மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்

4 நாட்களாக நடந்து வந்த அரசு மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

சென்னை,

தமிழகத்தில் அரசு மருத்துவர்களில் ஒரு பிரிவினர், தகுதிக்கேற்ற ஊதியம், பட்டமேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்டவை வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சென்னை மருத்துவ கல்லூரியில் நடைபெற்று வந்த போராட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தலைமை செயலகத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. எனினும் மருத்துவர்களின் கேரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், அரசு மருத்துவர்கள் கேரிக்கைகளை ஆய்வு செய்வதற்காக சுகாதார திட்ட பணிகள் இயக்குநர் செந்தில்ராஜ் நியமனம் செய்யப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது. அவர் 2 வாரங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், அரசு மருத்துவர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இதைத்தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், தமிழக சுகாதாரத்துறையின் சாதனைக்கு மருத்துவர்களும், செவிலியர்களுமே காரணம். அரசு மருத்துவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலித்து வருகிறது என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT