சேலம்,
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசு பொருட்காட்சி தொடக்க விழா நேற்று மாலை நடந்தது.
இதில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி பொருட்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும் திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில், அமைச்சர் கலந்து கொண்டு ரூ.7 கோடியே 72 லட்சம் மதிப்பில் 227 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அரசு பொருட்காட்சியில் அரசின் திட்டங்கள், சாதனைகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் 26 அரசு துறைகள், 5 அரசு சார்பு நிறுவனங்கள் என மொத்தம் 31 துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர பல்வேறு பொழுதுபோக்கு கடைகளும் உள்ளன. தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அரசு பொருட்காட்சி 45 நாட்கள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். விழாவில் கலெக்டர் இளம்பகவத், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமணன், சிவக்குமார். பழனிவேல், மாநகராட்சி ஆணையாளர் லலித் ஆதித்யநீலம், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.