தமிழக செய்திகள்

கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்யும் அரசு மருத்துவமனை நர்சுகள்

அரசு மருத்துவமனைகளில் ஆட்குறைப்பை கைவிடக்கோரி, கோரிக்கை அட்டை அணிந்து நர்சுகள் பணி செய்தனர்.

சென்னை,

கோரிக்கை அட்டை

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிடக் கோரி தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசாணை 204-ஐ ரத்து செய்யவும், ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிடவும் கோரி கடந்த 29.7.2026 முதல் 30.7.2026 வரை 3 நாட்கள் நர்சுகள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்தனர்.

இந்நிலையில் அரசாணை 204-ஐ ரத்து செய்வது தொடர்பாகவோ, ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிடுவது தொடர்பாகவோ அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த திட்டமும் செயல்பாடோ இல்லாத காரணத்தால் ஏற்கனவே அறிவித்திருந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கோரிக்கை கடிதம் வழங்கும் இயக்கத்துடன் சேர்த்து கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்யும் இயக்கத்தையும் இன்று முதல் 5-ம் தேதி வரை 3 நாட்கள் தொடர முடிவு செய்யப்பட்டது.

அரசுக்கு வேண்டுகோள்

அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் நர்சுகள், மீண்டும் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தங்களுடைய கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.