தமிழக செய்திகள்

மேற்கு வங்கத்தில் ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை: தமிழகத்திலும் வாக்குறுதிகளை நிறைவேற்ற அன்புமணி வலியுறுத்தல்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நடவடிக்கைகள் எப்போதும் பாராட்டத்தக்கவை தான்.

சென்னை,

மேற்கு வங்கத்தில் ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை சுட்டிக்காட்டிய அன்புமணி, தமிழகத்திலும் தவெக அரசு அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதி

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மேற்கு வங்கத்தில் பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மாதந்திர மின்பயன்பாடு கணக்கெடுப்பு, வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.2000 மாத உதவித் தொகை, ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை ஆகியத் திட்டங்களை அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் இதே வாக்குறுதிகளை ஆளும் த.வெ.க. அளித்திருந்த நிலையில், அவை எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேற்கு வங்க அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கிய அம்மாநில முதல்-அமைச்சர் சுவேந்து அதிகாரி, இப்போது 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் மின் கணக்கீடு வரும் ஜனவரி முதல் மாதம் ஒருமுறை நடத்தப்படும்; வேலையில்லா இளைஞர்களுக்கு 2027 ஜனவரி முதல் மாதம் ரூ.2000 வீதமும், 2028 ஜனவரி முதல் ரூ.3,000 வீதமும் உதவித்தொகை வழங்கப்படும்; ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்தார். அவர்களில் 11 ஆயிரம் பேருக்கு ஏற்கனவே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நடவடிக்கைகள் எப்போதும் பாராட்டத்தக்கவை தான்.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்தால்,‘‘தற்போது இருக்கும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணக் கணக்கீடு நீக்கப்பட்டு, மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடுவது அமல்படுத்தப்படும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டால், இரு மாதங்களுக்கு 1000 யூனிட் பயன்படுத்தும் ஒரு குடும்பம், இப்போது செலுத்தும் ரூ.6,870-க்கு பதிலாக மாதம் ரூ. 1570 வீதம் இரு மாதங்களுக்கு ரூ.3,140 கட்டணம் செலுத்தினால் போதுமானது. இது இப்போதைய மின்கட்டணத்தை விட 54.29 சதவீதம் குறைவு ஆகும்.

த.வெ.க. அரசு

ஆனால், இந்த வாக்குறுதியை நிறைவேற்ற த.வெ.க. அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, இந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்று கேட்கும் போதெல்லாம், மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்ட பின்னர் மாதாந்திர மின்கணக்கீடு மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், மின்வாரியக் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 6 மாதங்களில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது மக்களை ஏமாற்றும் முயற்சியாகவே பார்க்கப்படும்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும் இதே வாக்குறுதியை அளித்திருந்தது. ஆனால், ஆட்சியிலிருந்த ஐந்தாண்டுகளிலும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்திய போதெல்லாம், ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பின்னர் மாதாந்திரக் கணக்கீடு மேற்கொள்ளப்படும் என்று காரணங்களைக் கூறியே ஐந்தாண்டுகளையும் திமுக அரசு கடத்தியது.

மாதாந்திர மின்சாரக் கணக்கீடு குறித்த வாக்குறுதிகளை திமுகவும், தவெகவும் அளித்த போது, அதற்காக எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, ஒத்துவராத நிபந்தனைகளையெல்லாம் விதித்து அவற்றை செயல்படுத்த ஆட்சியாளர்கள் மறுப்பது அழகல்ல. அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

உதவித் தொகை

அதேபோல், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 உதவித் தொகை, காலியாக உள்ள அனைத்து அரசுத்துறை பணியிடங்களும் நிரப்பப்படும் என்ற வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அரசு பணியிடங்களை நிரப்புவதில் கடந்த திமுக அரசின் வழித்தடத்தையே தவெக அரசும் பின்பற்றி வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணைப்படி தான் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கூடுதல் போட்டித் தேர்வுகளை நடத்துவதற்கோ, ஒவ்வொரு முறையும் தேர்வு செய்யப்படும் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கோ புதிய அரசு முயற்சி செய்யவில்லை. வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்னும் போதிலும் அதையும் செயல்படுத்த அரசு தயங்குவதற்கான காரணம் விளங்கவில்லை.

2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், தவெகவை மக்கள் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தியதற்கு காரணம், போட்டியிட்ட மற்ற கட்சிகளை தவெக மீது அதிக நம்பிக்கை வைத்தது. அந்த நம்பிக்கையை தகர்க்காமல் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், அளித்த வாக்குறுதிகளை நியாயமான காலவரையறைக்கும் நிறைவேற்ற வேண்டும். மக்கள் நலன் சார்ந்த 3 முக்கிய வாக்குறுதிகளை மேற்கு வங்க அரசு நிறைவேற்றியுள்ள நிலையில், அதே காலத்தில் ஆட்சிக்கு வந்த தவெக அரசும் அந்த 3 வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT