சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவும், ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை ஏற்படுத்தவும் தடையாக இருந்த விதியை தேசிய மருத்துவ ஆணையம் நீக்கியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளை, குறிப்பாக 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க வாய்ப்பு உருவாகியிருக்கிறது.
இந்தியாவில் எந்த மாநிலமாக இருந்தாலும் 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகபட்சமாக 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், அதற்கும் கூடுதலான மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளோ, மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களோ அனுமதிக்கப்படாது என்று தேசிய மருத்துவ ஆணையம் கடந்த 16.08.2023-ஆம் நாள் அரசிதழ் அறிவிக்கை வெளியிட்டது. அதன்படி தமிழ்நாட்டின் மக்கள்தொகை அடிப்படையில் இன்றைய நிலையில், 7,731 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே இருக்க முடியும்; ஆனால், ஏற்கனவே தமிழகத்தில் அரசு-தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 12,650 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் இருப்பதால் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவும் முடியாது; ஏற்கனவே தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும் முடியாத நிலை உருவானது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிக்கை வெளியான உடனேயே அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் கடிதமும் எழுதினேன். அதைத் தொடர்ந்து 2024-25-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக இருந்த இந்த விதியை மருத்துவ ஆணையம் ஓராண்டுக்கு நிறுத்தி வைத்தது. அதன்படி 2025-ஆம் ஆண்டுக்கு முன்பாக விண்ணப்பித்த மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய விதிமுறைகளை கைவிடுவதாக கடந்த 27.04.2026ஆம் நாள் வெளியிட்ட அறிவிக்கையில் தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்திருக்கிறது. இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கையாகும்.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தலா ஓர் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம் ஆகும். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான 50 மாத ஆட்சியில் மட்டும் 13 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட ஆட்சிக்காலத்தில் அதிக அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் தான்.
ஆனால், அதன்பின் வந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் ஒரே ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கூட தொடங்கப்படவில்லை. புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கான தடை 2025-ஆம் ஆண்டில் தான் நடைமுறைக்கு வந்தது. திமுக அரசு நினைத்திருந்தால், அதற்கு முந்தைய 4 ஆண்டுகளில் 6 மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளை திறந்திருக்க முடியும். ஆனால், மக்கள் நலனிலோ, மாணவர்கள் நலனிலோ அக்கறை இல்லாத திமுக அரசு அதை செய்யவில்லை.
புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான தடை நீக்கப்பட்டு விட்ட நிலையில், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும். அடுத்த சில நாள்களில் தமிழ்நாட்டில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட புதிய அரசு அமைக்கப்பட்டவுடன் இதற்கான நடவடிக்கையை பா.ம.க மேற்கொள்ளும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.