கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தெருக்களுக்கு சாதி பெயர் இல்லை என்பதை அரசு உறுதி செய்யவேண்டும் - ஐகோர்ட்டு நீதிபதி கருத்து

ஆதி திராவிடர் நலத்துறையை, சமூக நீதித்துறை என்று தமிழ்நாடு அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் தெருக்களுக்கு சாதி பெயர் இல்லை என்பதை அரசு உறுதி செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி என்.ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

நீதிபதி அதிர்ச்சி

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் போலீசார் பதிவு செய்த குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல் தகவல் அறிக்கையில் ஒரு குறிப்பிட்ட சாதி பெயரை கொண்ட தெரு என்று குறிப்பிட்டு இருந்தது. இதை படித்து பார்த்த நீதிபதி அதிர்ச்சி அடைந்தார்.

அரசு உறுதி செய்யவேண்டும்

"2026-ம் ஆண்டிலும் இப்படி சாதி பெயரை குறிப்பிட்ட தெரு உள்ளதா? தெருக்கள், சாலைகளில் உள்ள சாதிப் பெயர் களை நீக்கவேண்டும் என்று 1998-ம் ஆண்டே தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பல உத்தரவுகளை ஐகோர்ட்டும் பிறப்பித்துள்ளன. அப்படியிருந்தும், ஒரு தெருவுக்கு குறிப்பிட்ட சாதி பெயரை வைத்து எப்படி அழைக்க முடியும்? இதனால்தான் அண்மையில், ஆதி திராவிடர் நலத்துறையை, சமூக நீதித்துறை என்று தமிழ்நாடு அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. எனவே, தமிழ்நாட்டில் தெருக்களுக்கு சாதி பெயர் இல்லை என்பதை அரசு உறுதி செய்யவேண்டும்" என்று கருத்து கூறினார்.

தாமாக முன்வந்து வழக்கு

பின்னர், "தமிழ்நாடு முழுவதும் தெருப் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கிறேன். இந்த வழக்கை தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு பட்டியலிடும்படி ஐகோர்ட்டு பதிவாளருக்கு பரிந்துரைக்கிறேன்” என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.