சென்னை,
நெல், அரிசி விநியோகத்தை சீராக பராமரிக்க ஏதுவாக அவற்றின் இருப்புக்கு உச்ச வரம்பு நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்த விற்பனையாளர்கள் 2,000 மெட்ரிக் டன். சில்லறை விற்பனையாளர்கள் 3 மெட்ரிக் டன் இருப்பு வைக்கலாம் என்றும் பெரிய சங்கிலித் தொடர் விற்பனை நிலையங்கள் கடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தலா 8 மெட்ரிக் டன் இருப்பு வைக்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அரிசி ஆலை உரிமையாளர்கள் ஒரு மாத உற்பத்தி திறனுக்கு மிகாமல் இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்றும் இறக்குமதியாளர்கள் சுங்க அனுமதி பெற்ற நாளில் இருந்து 45 நாட்களுக்கு மேல் இருப்பு வைத்திருக்கக் கூடாது எனவும் கூடுதல் இருப்பு வைக்கப்பட்டிருந்தால் நவ. 16க்குள் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் அவற்றை குறைக்க வேண்டும் என உத்தரவிட்டப்பட்டுள்ளது.
வணிக நிறுவனங்கள். சட்டப்பூர்வ அமைப்புகள் இருப்பு விவரத்தை மத்திய நுகர்வோர் விவகாரத் துறையின் fcainfoweb.nic.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அதிகமாக இருப்பு வைத்துள்ள நிறுவனங்கள் நவ.16-க்குள் இருப்பை குறைக்க வேண்டும் என்றும் இந்த புதிய இருப்பு உச்சவரம்பு கட்டுப்பாடுகள் 2027 ஜனவரி 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.