சென்னை,
சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் பிரதான சாலைகள், பஸ் போகும் சாலைகள், தெரு சாலைகள் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. இவற்றின் நீளம் சுமார் 1000 கிலோ மீட்டர் ஆகும். தற்போதைய மழையால் 8,110 இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாகி விட்டதாக மாநகராட்சி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 5,350 இடங்களில் சீரமைப்பு பணிகள் நடந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகளில் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மேடு பள்ளங்கள் தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் சேதமடைந்த சாலைகளை சரிசெய்து தரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், சென்னையில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, 678 சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.130.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 15 மண்டலங்களில் 148.10 கி.மீ. நீளச் சாலைகளை மேம்படுத்த ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. 595 தார்ச்சாலைகள், 58 சிமெண்ட் சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன.
முதல்-அமைச்சரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இச்சாலைகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி (Tender) கோரப்பட்டுள்ளது. இந்த டெண்டர் நடைமுறைகள் மற்றும் ஒப்பந்தங்கள் முடிந்தவுடன் சீரமைப்புப் பணிகள் உடனடியாகத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.