எம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் விஜய் அறிவித்தார். விஜய் நேற்று வெளியிட்ட இந்த அறிவிப்பு எம்.எல்.ஏக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. விஜய் அறிவித்த உடனேயே அரசு சார்பில் என்ன கார் வழங்கப்படும் என்றும் எம்.எல்.ஏக்கள் தங்களுக்குள் ஆர்வத்துடன் பேசிக்கொண்டனர். இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்திற்கு மகேந்திர நிறுவனத்தின் ஸ்கார்பியோ, பொலிரோ நியோ, எக்ஸ்யூவி 7 எக்ஸ் ஓ, உள்ளிட்ட 6 வகையான மாடல் கார்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. டெஸ்ட் டிரைவிற்காக தலைமை செயலகத்திற்கு இந்த கார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில் அதிகாரிகள் அதை சோதனை செய்து, ஏதாவது ஒரு காரை தேர்வு செய்து பரிந்துரைப்பார்கள் என்று தெரிகிறது.
தமிழக சட்டமன்றத்தில் கடந்த 12-ந்தேதியன்று காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ஜோதிமணி பேசும்போது, எந்தவொரு பொருளாதார பலம் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றி கொண்டிருப்பவர்கள் தங்களின் தொகுதிப் பணிகளை செய்ய சொந்த வாகனங்களோ அல்லது உதவியாளர்களையோ வைத்துக்கொள்ள முடிவதில்லை என்று தெரிவித்தார். அவரது கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் கார் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக முதல் அமைச்சர் விஜய் சட்டசபையில் விதி எண் 110-கீழ் அறிவித்தார். விஜய் அறிவித்தாவது:
எம்.எல்.ஏக்கள் தங்களது தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறியவும், அரசுத் திட்டங்கள் மக்களை சென்றடைவதை கண்காணிக்கவும், தங்களின் தொகுதி முழுவதும் தொடர் பயணங்களை சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. பொருளாதார பலமில்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றும் மற்றும் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியை தொய்வின்றி தொடருவதற்கு வசதியாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும்.
இந்த அறிவிப்பு, சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களின் பயணத்தேவைகளுக்காக பிறரை சார்ந்து இருப்பதை தடுத்து, அவர்கள் எவ்வித சமரசமும் இன்றி சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தங்களின் தொகுதிக்குட்பட்ட கிராமப்புற மற்றும் தொலைதூரப்பகுதிகளுக்கு எளிதாக பயணம் செய்து, தொகுதி முழுவதும் உள்ள மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளுக்கு தீர்வுகாண வழிவகுக்கும்.
அதோடு மட்டுமின்றி, சட்டமன்ற உறுப்பினர்களின் பொருளாதார சுமையை குறைத்து, கடைகோடி மக்களுக்கு லஞ்சலாவண்யமற்ற, நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை அளிக்கவும் உதவும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வழங்கும் வாகனத்தை பராமரிக்கும் விதமாக, வாகனத்துக்கு டிரைவர், எரிபொருள், வாகன பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வாகனப்படியாகவும், அலுவலகப்பணிகளில் உதவி செய்ய ஒரு உதவியாளரை நியமித்துக்கொள்ள மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் உதவியாளர் படியாகவும் வழங் கப்படும். இதற்காக உரிய சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு ஆணைகள் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்