தமிழக செய்திகள்

மேகதாது அணை தொடர்பான தீர்மானத்தின் இடைச்செருகலை ஆதரிக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி

மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மேகதாது அணை

இன்றைய தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்ட அரசினர் தனித் தீர்மானம் மூலம் கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை நான் ஆதரித்துப் பேசினேன்.

எனக்கு அடுத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், தன்னுடைய உரையில் ஏற்கெனவே திருத்தம் ஒன்று அளித்திருப்பதாகவும், அது பற்றிய கருத்தை தெரிவித்தார்கள். உடனடியாக, முதல்-அமைச்சர் விஜய் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து, 'நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பான ஒரு பத்தியை' இணைக்கலாம் என தெரிவித்தார்கள்.

தீர்மானம்

பொதுவாக தீர்மானத்திற்கான திருத்தங்கள் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டு, பேரவையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு, பின்னர்தான் சேர்க்கப்பட வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்த திருத்தத்தை பேரவைக்குத் தெரிவிக்காமல், முன்மொழியப்படாமல், வழிமொழியப்படாமல், விவாதிக்கப்படாமல், வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு சட்டப் பேரவைத் தலைவர் திருத்தத்துடன் கூடிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று அறிவித்தது சட்டமன்ற விதிகளுக்கு முற்றிலும் முரணானது.

சட்டமன்ற நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தை அதிமுக சார்பில் ஆதரித்தோமே தவிர, முதல்-அமைச்சர் கடைசியாக மொழிந்த இடைச் செருகல் தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. திருத்திய தீர்மானம் அரசினர் தனித் தீர்மானம் ஆகாது. இத்தீர்மானம் யாரை மகிழ்விக்க ? யாரை வஞ்சிக்க?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.