சென்னை,
அரசின் வருவாயை பாதுகாத்து, வர்த்தகத்தை எளிதாக்க வேண்டும்’என்று மத்திய மறைமுக வரிகள், சுங்க வாரிய தலைவர் விவேக் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.
"சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) சீர்திருத்தங்கள் மற்றும் 57-வது ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பரிந்துரைகள் குறித்த கூட்டம் சென்னையில் நடந்தது. இதில், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத் தலைவர் விவேக் சதுர்வேதி தலைமை தாங்கிப் பேசியதாவது:-"
‘ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களை சுமூகமாகவும், திறம்படவும் மற்றும் தடையின்றியும் செயல்படுத்துவது முக்கியமாகும். அதேவேளையில், அரசின் வருவாயை பாதுகாத்துக்கொண்டு வர்த்தகத்தை எளிதாக்க வேண்டும். வரி நிர்வாகம் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளுக்கு இடையே ஆக்கபூர்வமான கலந்துரையாடலுக்கு இக்கூட்டம் ஒரு சிறந்த தளத்தை அமைத்துக்கொடுத்துள்ளது. இது கேள்விகளுக்கு தீர்வு காண்பதற்கும், திறமையான, வெளிப்படையான மற்றும் வர்த்தக-நட்பு ஜி.எஸ்.டி. நிர்வாகத்தை உறுதி செய்வதற்கான அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதற்கும் உதவியது’
ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மற்றும் பரிந்துரைகள் குறித்து வர்த்தக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடந்தது. இதில், வர்த்தக பிரதிநிதிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள் மற்றும் விளக்க கோரிக்கைகளுக்கு உரிய பதில்கள் அளிக்கப்பட்டன. மத்திய அரசு மேற்கொண்ட ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களுக்கு பாராட்டு தெரிவித்த பிரதிநிதிகள், வர்த்தகத்தை எளிதாக்குவதையும், தொழில் செய்வதை எளிதாக்குவதையும் நோக்கமாக கொண்ட நடவடிக்கைகளுக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய உறுப்பினர் (ஜி.எஸ்.டி.) சஞ்சய் மங்கல், தமிழ்நாடு அரசின் வணிக வரித்துறை கமிஷனர் எஸ். நாகராஜன், சென்னை ஜி.எஸ்.டி. மண்டல தலைமை கமிஷனர் எஸ்.கே. விமலநாதன் ஆகியோருடன், வர்த்தகப் பிரதிநிதிகள் மற்றும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.