கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வலியுறுத்தி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை - அரசுப்பள்ளி ஆசிரியர் கைது

தேனி அருகே மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

தேனி,

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே ஒரு கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் ஆர்.வைத்திநாதனுக்கு தொலைபேசி மூலம் புகார் வந்தது. அதன்பேரில், மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார்.

கல்வித்துறை அதிகாரிகள் அந்த பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஆணைமலையன்பட்டியை சேர்ந்த சாமுவேல் (45 வயது) என்பவர், அங்கு படிக்கும் மாணவர்களை ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வலியுறுத்தி பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து சாமுவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கலெக்டர் உத்தரவின்பேரில் நடத்திய விசாரணையில் ஆசிரியர் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டுள்ளதால் அதுகுறித்த விவரங்கள் போலீஸ் நிலையத்தில் இருந்து கல்வித்துறைக்கு பெறப்படும். பின்னர் சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ய துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற பாலியல் தொடர்பான புகார்களை 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்' என்றனர்.