ஈரோடு,
ஈரோட்டில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு பள்ளிக்கூட ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு-பெருந்துறை ரோட்டையொட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி பிரிவு பகுதியை சேர்ந்த விஜயசாரதி (வயது 45) என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவர் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலரிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக பள்ளிக்கூட தலைமை ஆசிரியை தங்கமணிக்கு தகவல்கள் வந்தன.
இதுகுறித்து அவர் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். சம்பவம் குறித்த விவரங்களை முழுமையாக அறிந்த தலைமை ஆசிரியை தங்கமணி போலீசாருக்கு தகவல் அளித்தார்.
அதைத்தொடர்ந்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர் விஜயசாரதியை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆசிரியர் விஜயசாரதி மீது போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை கைது செய்தனர். ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனைக்கு பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பள்ளிக்கூட ஆசிரியரே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.