சென்னை,
திருத்தணியில் சுற்றுச்சூழலை் சீரழிக்கும் கிளிங்கர் அரவை ஆலை அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று சீமான் தெரிவித்தார். இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், கார்த்திகேயபுரம் ஊராட்சியில் ஏறத்தாழ 838 கோடி ரூபாய் முதலீட்டில், ஆண்டுக்கு 35 லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கிளிங்கர் அரவை ஆலையை அமைத்து, அப்பகுதியின் சுற்றுச்சூழலை சீரழிக்க தமிழ்நாடு அரசு முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு முன்னதாக, அப்பகுதி மக்களின் நலன், நீர்வளம், விவசாயம் மற்றும் எதிர்கால தலைமுறையினரின் வாழ்வாதாரம் ஆகியவை குறித்து முழுமையான மதிப்பீடு செய்யப்பட வேண்டியதும், அப்பகுதி மக்களின் கருத்தினை கேட்க வேண்டியதும் மிகவும் இன்றியமையாததாகும்.
அதனை விடுத்து, கிளிங்கர் அரவை ஆலையில் கிளிங்கர் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்ற காரணத்தை காட்டி, கிளிங்கரால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகளை புறக்கணித்துவிட முடியாது. கிளிங்கர் அரவை ஆலையில் மூலப்பொருட்களை கையாளுதல், சிமெண்ட் அரவை, தூசு பரவல், கனரக வாகனப் போக்குவரத்து, ஒலி மாசு மற்றும் நீர்வளப் பயன்பாடு ஆகியவற்றால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும். தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்விடங்களும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மக்களின் கருத்துகளையும் எதிர்ப்புகளையும் மதிக்காமல் எந்தவொரு திட்டத்தையும் திணிப்பது மக்களாட்சி நெறிமுறைகளுக்கு எதிரானதாகும். நாட்டை ஆளும் ஆட்சியாளர்களுக்கு நாட்டு மக்களின் வாழ்வுரிமையைவிட தனியார் நிறுவனங்களின் லாப நோக்கம் என்பது முதன்மையானது அல்ல. சுற்றுபுரத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது எப்படி மக்களின் கடமையோ, அதைப்போலவே, இயற்கையைப் பாதுகாப்பதும், மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதும் அரசின் முதன்மைக் கடமையாகும். சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் எந்தவொரு திட்டத்திற்கும் அரசு அனுமதியளிக்கக்கூடாது.