சென்னை,
முதுமலை புலிகள் காப்பகத்தில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர் நியமனம்! -தமிழக அரசின் தொடரும் தனியார்மயப் போக்கை கைவிட எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொறுப்பு தலைவர் அச.உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழகத்தின் பல்லுயிர் பெருக்கத்திற்கும், சுற்றுச்சூழல் சமநிலைக்கும் ஆதாரமாக விளங்கும் முதுமலை புலிகள் காப்பகத்தின் உதகை கோட்டத்தில், வரும் டிசம்பர் மாதம் முதல் 2027-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிப்பதற்கு வனத்துறை ஒப்பந்தப்புள்ளிகள் கோரியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளான ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்தல், அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புதல் ஆகியவற்றை நிறைவேற்றுவதில் தவெக அரசு எவ்வித அக்கறையும் காட்டவில்லை. மாறாக, மின்சாரம், போக்குவரத்து, நகராட்சி நிர்வாகம் ஆகிய அத்தியாவசிய துறைகளை தொடர்ந்து, தற்போது வனத்துறையிலும் தனியார்மயத்தை திணிக்கும் அரசின் இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அரசு துறைகளை தனியார் வசம் ஒப்படைத்துவிட்டு, தனது சமூக பொறுப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ளும் போக்கை தவெக அரசு கைவிட வேண்டும். குறிப்பாக, அரிய வகை வனவிலங்குகள் மற்றும் புலிகள் பாதுகாப்பு, வனக்கொள்ளை மற்றும் வேட்டையாடுதலை தடுத்தல், அடர்ந்த வனப்பகுதிகளை ரோந்து பணிகள் மூலம் கண்காணித்தல், மனித - வனவிலங்கு மோதல்களை தவிர்த்தல் போன்றவை மிகவும் சவாலான மற்றும் உயிர் பாதுகாப்பு சார்ந்த பணிகளாகும்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில், வனச்சூழல் குறித்த போதிய புரிதலோ, முறையான பயிற்சியோ இல்லாத தற்காலிக ஒப்பந்த பணியாளர்களை ஈடுபடுத்துவது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும். இது வனவிலங்குகளின் வாழ்வாதாரத்திற்கும், ஒட்டுமொத்த முதுமலை புலிகள் காப்பகத்தின் பாதுகாப்பிற்கும் பேராபத்தாக முடியும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எழுப்பும் நியாயமான அச்சத்தை அரசு புறந்தள்ள கூடாது.
எனவே, முதுமலை புலிகள் காப்பகத்தில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிக்கும் முடிவை வனத்துறையும், தமிழக அரசும் உடனடியாக கைவிட வேண்டும். மேலும், வனப்பாதுகாப்பு பணிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, உரிய தகுதியும் பயிற்சியும் பெற்றவர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நிரந்தர பணியாளர்களாக நியமிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.