தமிழக செய்திகள்

கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கல்லூரிகளில் உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சென்னை,

கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு;

”தமிழ்நாட்டில் 183 அரசு கலைக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஏறத்தாழ எட்டாயிரத்து ஐநூறு கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 1999 ஆம் ஆண்டு முதல் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது இவர்கள் மாத ஊதியமாக ரூபாய் 25 ஆயிரம் மட்டுமே பெற்று வருகின்றனர். ஆனால் பல்கலைக்கழக மானியக் குழு உதவிப் பேராசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூபாய் 50 ஆயிரம் வழங்க வேண்டும் என நிர்ணயித்துள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு உதவிப் பேராசிரியர்களுக்கு நிர்ணயித்த மாத ஊதியம் ரூபாய் 50 ஆயிரத்தை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வகுப்புகளைப் புறக்கணித்து கடந்த பத்து நாட்களாக வேலை நிறுத்தம் மற்றும் உள்ளிருப்புப் போராட்டங்களை கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வருகின்றனர்.

இப்போராட்டத்தின் காரணமாக உள் மதிப்பீட்டுத் தேர்வுகள் நடைபெறவில்லை. அரசு வழங்கிய மடிக்கணினிகள் மாணவர்களைச் சென்றடையவில்லை.‌ ஆகவே மாணவர்களின் நலன் கருதி அரசு உடனடியாக இப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மாத ஊதியம் ரூபாய் 50 ஆயிரம் வழங்குதல், மருத்துவக் காப்பீடு வழங்குதல், வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்தல், பணியின் போது இறந்தால் இழப்பீட்டுத் தொகை வழங்குதல் உள்ளிட்ட கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகள் நியாயமானவை.

இதுவரை பணியின் போது காலமான‌ 133 கௌரவ விரிவுரையாளர்களுக்கு எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை. மாத ஊதியம் ரூபாய் 18 ஆயிரத்திற்கு மேல் பெறுபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும் என்பது அரசு விதி. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆகவே, தலைநகர் சென்னையில் கல்லூரி கல்வி இயக்ககத்தின் முன்னர் போராடி வரும் கௌரவ விரிவுரையாளர் சங்க நிர்வாகிகளை அழைத்து உடனடியாகப் பேச்சு வார்த்தை நடத்திட வேண்டும். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்.

மேலும், தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் 27-12-2025 அன்று நடத்திய உதவிப் பேராசிரியர் நியமனத்திற்கான தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.