சென்னை,
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டிலுள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 125 கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்தக் கல்லூரிகளில் 69% கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பது கல்லூரிகளின் சீரழிவுக்கு தான் வழிவகுக்கும்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பது இப்போது ஏற்பட்ட சிக்கல் இல்லை. கடந்த திமுக ஆட்சியில் தொடங்கி கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக அரசு கல்லூரிகளுக்கு முதல்வர்களே நியமிக்கப்படாமல் இருந்ததால் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.
2024 -ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் 13 கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்தன. 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 30 ஆகவும், 2024 ஜூன் மாதத்தில் 60க்கும் அதிகமாகவும் உயர்ந்தன. 2025 ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கை 100-ஐ கடந்து விட்டது. காலியாக உள்ள முதல்வர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஒவ்வொரு முறை இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் போதும், அரசு கல்லூரிகளில் முதல்வர் பதவி காலியாக இருந்தாலும் கூட, பொறுப்பு முதல்வர்கள் நியமிக்கப்பட்டு நிர்வாகப் பணிகள் தடையின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதே அரசுத் தரப்பில் அளிக்கப்படும் பதிலாக இருந்தது. முதல்வருக்கு துணை முதல்வர் மாற்றாக முடியாது.
ஓர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிரந்தர முதல்வராக இருப்பவர் மேற்கொள்ளக் கூடிய நிர்வாகப் பணிகளையும், அவர் எடுக்கும் முடிவுகளையும் பொறுப்பு முதல்வரால் எடுக்க முடியாது. இதனால் கல்லூரியின் செயல்பாடுகளும், வளர்ச்சியும் கண்டிப்பாக பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி, முதல்வர் பணியிடம் காலியாக இருந்தால், அந்த இடத்தில் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்படும் மூத்த இணைப் பேராசிரியருக்கு மாதம் ரூ.40,000 வரை கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும். இதனால் மாதத்திற்கு சுமார் ரூ.50 லட்சம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 கோடி வரை கூடுதலாக செலவு ஏற்படும். அரசு கல்லூரிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளும், சுமார் 50 கல்லூரிகளுக்கு சொந்தக் கட்டிடங்களும் இல்லாத நிலையில், ஆண்டுக்கு ரூ.6 கோடி இவ்வாறு அரசால் வீணடிக்கப்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்புவது என்பது கடினமான பணி அல்ல. கல்லூரி முதல்வர்கள் பணி மூப்பு அடிப்படையில் தான் நியமிக்கப்படுகிறார்கள். கல்லூரி ஆசிரியர்களின் பணி மூப்புப் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. அதன் அடிப்படையில் ஒரே நாளில் அனைத்துக் கல்லூரிகளுக்கும் முதல்வர்களை நியமிக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறும் முதல்வர்கள் யார், யார்? என்பது அரசுக்கு முன்கூட்டியே தெரியும். ஆனாலும், அவற்றை நிரப்ப கடந்த ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அதற்கான காரணங்களும் தெரியவில்லை. புதிய ஆட்சியிலும் அதே நிலை தொடரக்கூடாது.
ஒருபுறம் அரசு கலைக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், 9000-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்களும் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. கடந்த 12 ஆண்டுகளாக ஒரே ஒரு உதவிப் பேராசிரியர் கூட நியமிக்கப்படாத நிலையில், கடந்த ஆட்சியில் 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்ட போதிலும், அதில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் காரணமாக உதவிப் பேராசிரியர் நியமனங்களை மேற்கொள்ளவில்லை. இதனால் அரசு கலைக் கல்லூரிகளில் கல்வித்தரம் வீழ்ச்சியடைந்ததால் அவற்றில் சேர மாணவர்கள் முன்வரவில்லை. அதனால் நடப்பாண்டில் கூட 40%க்கும் கூடுதலான இடங்கள் இன்னும் நிரம்பாமல் காலியாக உள்ளன.
தமிழ்நாட்டின் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் உள்ளிட்ட எண்ணற்ற அறிவியலாளர்களையும், பல்துறை வல்லுனர்களையும் உருவாக்கிய பெருமை கொண்டவை. முதல்வர்கள் இல்லை, ஆசிரியர்கள் இல்லை என்பதற்காக அவை சீரழிவதை அனுமதிக்கக் கூடாது. எனவே, 125 அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.