சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கோவை சிறுமியை அடுத்து மரக்காணத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிர படுத்த வேண்டும்!
கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் அமளிக்கிறது. அவரது பெற்றோரைக் காணொளி வாயிலாகத் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன்.
கோவை சூலூர் அருகே பள்ளப்பாளையத்தில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி மே 21 ஆம் தேதி இரவு காணாமல் போனார். பின்னர் கண்ணம்பாளையம் குளத்துக்கு அருகே தென்னந்தோப்பில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரித்ததில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் கார்த்திக் மற்றும் மோகன் ஆகிய இருவரைக் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அவ்விரு குற்றவாளிகளையும் பிணையில் வெளிவிடாமல், வழக்கை விரைந்து விசாரித்து அவர்களுக்கு கடும் தண்டனை வாங்கிட ஆவன செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
அடுத்து, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வண்டிப்பாளையத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருக்கிறார் என்கிற செய்தி மேலும் நம்மை உலுக்கியெடுக்கிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக காவல்துறையில் 'சிங்கப்பெண்'சிறப்பு படை உள்ளிட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கும் நிலையிலமல், தமிழ்நாடு அரசு, இதுபோன்ற கொடுங்குற்றங்கள் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
பாதிக்கபட்ட இவ்விரு சிறுமிகளின் குடும்பத்தினருக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையைவழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.