கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்

அனுபவம் பெற்ற கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, வேளாண்மை உற்பத்தி, கல்வி, மருத்துவம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக மின்சாரம் விளங்குகிறது. மாநிலம் முழுவதும் தடையற்ற மற்றும் தரமான மின்சார விநியோகத்தை உறுதி செய்வது தமிழ்நாடு மின்வாரியத்தின் முக்கிய பொறுப்பாகும்.

தமிழ்நாடு மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான கள உதவியாளர் (Field Assistant) மற்றும் தொழில்நுட்பப் பணியிடங்கள் காலியாக உள்ளதாக பணியாளர் சங்கங்களும், மின்வாரிய வட்டாரங்களும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றன. இதன் காரணமாக மின்கம்பங்கள் பராமரிப்பு, பழுதுபார்ப்பு, மின் இணைப்பு வழங்குதல், அவசரகால மின் தடைகளை சரிசெய்தல் உள்ளிட்ட களப்பணிகளில் கடுமையான பணியாளர் பற்றாக்குறை நிலவி வருகிறது.

இந்த நிலையில், 2020-ம் ஆண்டு தகுதித்தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் 15,000 நபர்கள் கேங்மேன்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் பத்தாயிரம் நபர்களுக்கு 2021-ம் ஆண்டு கேங்மேன் பணி வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் கேங்மேன் பணியாளர்கள் மின்வாரியத்தின் களப்பணிகளில் நேரடி அனுபவம் பெற்றவர்களாக உள்ளனர். மின் விநியோக கட்டமைப்பு, மின் பாதை பராமரிப்பு, மின்தடை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளில் அவர்கள் ஏற்கனவே திறமையுடன் செயல்பட்டு வருகின்றனர். தேர்வு செய்யப்பட்ட 10 ஆயிரம் கேங்மேன் பணியாளர்களை தவிர தேர்வு செய்யப்பட்ட ஐந்தாயிரம் பேர் கேங்மேன் பணிக்கு தேர்வான நிலையில் அவர்களுக்கு நிரந்தர பணி வழங்காமல், தற்போது ஒப்பந்தத்தின் அடிப்படையில் மின்துறையில் பணி செய்து வருகின்றனர். அந்த 5,000 நபர்களை கேங்மேன்களாக பணி அமர்த்த தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடைகள் மற்றும் பழுதுகளை உடனடியாக சரிசெய்ய போதுமான களப்பணியாளர்கள் இல்லாத நிலை காணப்படுகிறது. இந்நிலையை மாற்றுவதற்கு புதிய பணியாளர்களை நியமித்து மீண்டும் பயிற்சி அளிப்பதை விட, ஏற்கனவே அனுபவம் பெற்ற கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிப்பது மின்வாரியத்திற்கும் பொதுமக்களுக்கும் பயனளிக்கும் நடைமுறையாக அமையும்.

மேலும், களப்பணியாளர் பற்றாக்குறையால் தற்போதுள்ள பணியாளர்களுக்கு அதிகப்படியான பணிச்சுமை ஏற்படுவதுடன், மின் பழுதுகள் சரிசெய்யப்படும் நேரமும் தாமதமாகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.

எனவே, தமிழ்நாடு மின்வாரியத்தில் நீண்ட காலமாக பணியாற்றி அனுபவம் பெற்றுள்ள கேங்மேன் பணியாளர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கி, காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களில் அவர்களை நிரந்தரமாக நியமிக்கவும், 2020-ம் ஆண்டு கேங்மேன் பணிக்காக தேர்வு செய்யப்பட்ட ஐந்தாயிரம் பேரை கேங்மேன்களாக பணியமர்த்துவதற்கு தமிழக அரசும், தமிழ்நாடு மின்வாரிய நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நடவடிக்கை மூலம் மின்வாரியத்தின் செயல்திறன் மேம்படுவதோடு, அறிவிக்கப்படாத மின்தடைகள் குறைக்கப்பட்டு, தமிழக மக்களுக்கு தடையற்ற மற்றும் தரமான மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய முடியும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.