தமிழக செய்திகள்

லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் அரசின் நலத்திட்டம்: விஜய் வாக்குறுதி

பத்து லட்சம் பேர் மனு அளித்தால் சட்டசபையில் விவாதிக்கப்படும் என்று தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்தார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கவுள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று கன்னியாகுமரியில் இன்று ரோடு ஷோவிற்கு அனுமதி தவெக தரப்பில் கோரப்பட்டது. மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். மகாதானாபுரம் ரவுண்டானாவில் விஜய் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது சில வாக்குறுதிகளை விஜய் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:

​என் நெஞ்சில் குடியிருக்கும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் எல்லோருக்கும் எனது வணக்கம். என் நெஞ்சில் குடியிருக்கும் காரைக்குடி மக்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஏன் என்றால் அன்று பேச முடியாமல் போய்விட்டது. கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்தது எனக்கு ரொம்ப, ரொம்ப சந்தோஷம். இங்கு எல்லோரையும் சந்திப்பதில் ரொம்ப, ரொம்ப சந்தோஷம். இந்த ​வெயிலில், வியர்வையில எனக்காக நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களுடைய அன்பிற்கு கோடான கோடி நன்றிகள். ​நான் ஒரு சில விஷயங்களை நான் இங்கு அறிவிக்கலாம் என்று இருக்கிறேன். கொஞ்சம் அதை மட்டும் அமைதியாக கேட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும். படிக்கலாமா?

லஞ்சமில்லாமல் ஒவ்வொருவருக்கும் அரசின் நலத்திட்டம் போய்ச் சேரும். ​அதற்கென தனியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆதார் கார்டைப் போல ஒரு தமிழ்நாடு சிட்டிசன் பிரிவிலேஜ் கார்டு வழங்கப்படும். ​ஒவ்வொரு குடும்பத்தைப் பற்றிய அனைத்து தரவுகளும் அதில் இருக்கும். ​பிறப்பிலிருந்தே ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கு உரிய திட்டப் பலன்கள் போய் சேரும். இந்த கார்டு பெற ​விண்ணப்பிக்கத் தேவையில்லை. லஞ்சம் கொடுத்து வேதனை அடையத் தேவையில்லை. வீட்டு வாசலுக்கே அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் வந்து சேரும்.

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உதவியுடன் இதற்கான தரவுகள் சாத்தியமாக்கப்படும். ​இது ஏதோ ஸ்டாலின் சார் விடுகிற கதை மாதிரி இல்லை. அறிவியல் பூர்வமாக சாத்தியமான ஒன்றுதான், இப்போது நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். அதை நமது த.வெ.க. ஆட்சி உருவாக்கி காட்டும். ​இதுவரைக்கும் இந்த கவர்மெண்ட் சிஸ்டத்துல, இப்போது நீங்க ஏதாவது ஒரு கவர்மெண்ட் அலுவலகத்துக்குப் போய் ஒரு வேலை செய்து கொடுக்கச் சொல்லி கேட்டீர்கள் என்றால், 'இவர்களைப் பாரு, அவர்களைப் பாரு, இப்ப வா, அப்புறம் வா, இந்த டாக்குமெண்ட் சரி இல்லை, அந்த டாக்குமெண்ட் சரி இல்லை' என்று இழுத்தடித்துக் கொண்டே இருப்பார்கள். அப்படி இழுத்தடிக்கிறதுக்கு காரணம் டாக்குமெண்ட்ஸ் இல்லை. டப்பு டப்பு, லஞ்சம். இந்த சிஸ்டம் 'குட் கவர்னன்ஸ்' (நல்லாட்சி) அல்ல, இது 'ஹராஸ்மென்ட்' (துன்புறுத்தல்).

​அடுத்தது நமது அரசு அமைந்த ஆறு மாதங்களுக்குள் தமிழ்நாடு சேவை உரிமைச் சட்டம் (ரைட் டூ சர்வீஸ் ஆக்ட்) நிறைவேற்றப்படும். 'வெற்றி தமிழ்நாடு சூப்பர் ஆப்' அப்படின்னு ஒன்று உருவாக்கப்படும். அதில் டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு, பிறப்புச் சான்று முதல் புகார் பதிவு வரை அனைத்தும் உங்கள் உள்ளங்கையிலேயே இருக்கும்.

​அடுத்தது, தமிழ்நாடு ரியல் டைம் கவர்னன்ஸ் டேஷ்போர்டு பார் அக்கவுண்டபிள் கவர்னன்ஸ். இன்று தமிழக அரசின் பட்ஜெட் வெறும் ஆவணமாக மட்டுமே நமக்குத் தெரியும். அதில் ஒவ்வொரு திட்டத்திற்காகவும் ஒதுக்கப்படும் நிதி எங்கே சென்று சேர்கிறது? யாரைச் சென்று சேர்கிறது? என்பது பற்றி எதுவுமே நமக்குத் தெரிவதில்லை. அது ஒரு சிதம்பர ரகசியம் போல ஸ்டாலின் சார் ரகசியமாகவே இருக்கிறது. ஆனால் நாம் அதை மாற்றுவோம்.

அடுத்தது சிட்டிசன் அஸ் பார்ட்னர்ஸ் இன் கவர்னன்ஸ். நமது அரசில் பொதுமக்கள் வெறும் வாக்காளர்களாக மட்டும் இருக்கத் தேவையில்லை. மாறாக பொதுமக்கள் அனைவரும் அரசின் பங்காளர்களாக இருப்பார்கள். ‘மை வெற்றிதமிழ்நாடு.இன்’ என்ற இணையதளம் ஒன்று உருவாக்கப்படும். மாநிலத்தின் வளர்ச்சிக்கான யோசனைகளை பொதுமக்களும் முன்வைக்கலாம். கொள்கை முன்மொழிவுகளுக்கு வாக்களிக்கலாம். அரசு சேவைகளை மதிப்பிடலாம். நிதிநிலை அறிக்கை செலவினங்களை கண்காணிக்கலாம். மக்கள் அரங்கம் என்ற திட்டத்தின் மூலம் தமிழக வரலாற்றில் முதன்முறையாக குடிமக்கள் ஒரு டிஜிட்டல் தளம் வழியாக நேரடியாக சட்டமன்றத்தில் மனுக்களைச் சமர்ப்பிக்க முடியும். 10 ஆயிரம் சரிபார்க்கப்பட்ட கையொப்பங்களுடன் ஒரு மனு சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கு அரசு அதிகாரப்பூர்வ பதிலை அளிக்க வேண்டியது கட்டாயமாக்கப்படும். 5 லட்சம் கையொப்பங்கள் கொண்ட மனு எனில் அதுகுறித்து தமிழக சட்டமன்றத்தில் கட்டாயம் விவாதம் நடத்தப்படும். சட்டமன்ற கூட்டத்தொடரில் முழுநாள் பொதுமக்கள் மனுக்களுக்கு என்று தனி நேரமாக ஒதுக்கப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.