தமிழக செய்திகள்

மதுரை மாவட்ட கலெக்டர், மாநகர காவல்துறை அதிகாரிகளுடன் கவர்னர் அர்லேகர் ஆய்வு கூட்டம்

மதுரையில் பொறுப்பு கவர்னர் அர்லேகர், மாவட்ட கலெக்டர், காவல் ஆணையருடன் 1.30 மணி நேரம் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

மதுரை,

தமிழ்நாடு பொறுப்பு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், இன்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்தார். அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் மதியம் 12.30 மணி போல், மதுரை மாவட்ட கலெகடர், காவல்துறை ஆணையர், மாநகர ஆணையர் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

மத்திய அரசு திட்டங்கள்

சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த ஆய்வு கூட்டத்தில், நிர்வாக செயல்முறைகள், மக்கள் குறை தீர்ப்பு, நிர்வாகத்தில் மின்னணு பயன்பாடு, நீர் நிலைகள் பராமரிப்பு, காச நோய் ஒழிப்பு, பொது சுகாதாரம் மற்றும் பள்ளி கல்வித்துறை மேம்பாட்டிற்காக மத்திய அரசு திட்டங்களும், அது செயல்படுத்தும் முறை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து மாவட்ட கலெக்டரிடம் கவர்னர் அர்லேகர் கேட்டறிந்தார்.

போதைப்பொருள் ஒழிப்பு

மேலும் மாநகரில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து காவல் ஆணையரிடம் கேட்டறிந்தார். முன்னதாக முன்னாள் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் இதுபோன்ற ஆய்வு கூட்டத்தை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.