தமிழக செய்திகள்

கவர்னர் அர்லேகர் இன்று மாலை கேரளா புறப்படுவதாக தகவல்; ஆட்சியமைப்பாரா விஜய்? அடுத்தடுத்து பரபரப்பு

பட்டினப்பாக்கம் இல்லத்தில் த.வெ.க. நிர்வாகிகளுடன் விஜய் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டி, த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை.

இதையடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது.

த.வெ.க.வின் அழைப்பை ஏற்று, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக அறிவித்தன. அதே சமயம், ஐ.யூ.எம்.எல். கட்சி தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்வதாகவும் த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றும் அறிவித்தது.

பெரும்பான்மைக்கு இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலையில், த.வெ.க. தரப்பில் இருந்து வி.சி.க. தலைவர் திருமாவளவனிடம் ஆதரவு கோரப்பட்டது. வி.சி.க. தலைவர் திருமாவளவன், தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவை அறிவிப்பதாக கூறியிருந்தார். இன்று காலை வி.சி.க.வின் நிலைப்பாடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரை வி.சி.க. தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இதனால் த.வெ.க. தலைவர் விஜய், கவர்னரிடம் பெரும்பான்மை ஆதரவை காண்பித்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. தற்போது விஜய் தனது நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்டு பட்டினப்பாக்கம் சென்றுள்ளார். அங்கு அவர் த.வெ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இந்த நிலையில், கவர்னர் அர்லேகர் இன்று மாலை கேரளா புறப்பட்டு செல்ல உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் பொறுப்பு கவர்னரான அர்லேகர், கேரள மாநிலத்தின் கவர்னராக உள்ளார். தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அங்கு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், கேரளாவில் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கவர்னர் அர்லேகர் தற்போது கேரளா செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகு 16-வது சட்டமன்றம் கலைக்கப்பட்டுவிட்ட நிலையில், வருகிற 10-ந்தேதிக்குள் புதிய அரசை அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அவ்வாறு புதிய அரசு அமைக்கப்படாவிட்டால் தமிழகத்தில் கவர்னர் ஆட்சி அமலுக்கு வர வாய்ப்புள்ளது. எனவே, இன்று மாலைக்குள் த.வெ.க. விஜய், கவர்னரை சந்தித்து பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவு எண்ணிக்கையை காட்ட வேண்டும். அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் திருப்பங்களால், தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத வகையில் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.