தமிழக செய்திகள்

கவர்னர் அர்லேகர் உடல் நலக்குறைவு : நேரில் நலம் விசாரித்தார் முதல்-அமைச்சர் விஜய்

2 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற உள்ளதாக கவர்னர் மாளிகை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை

கவர்னர் அர்லேகர் 2 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற உள்ளதாக கவர்னர் மாளிகை வட்டாரத்தில் தகவல் வெளியாகி இருந்தது. கவர்னருடன் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனையில் இருந்து கவனித்து வருகின்றனர்.

முதல்-அமைச்சர் விஜய்

முதற்கட்ட தகவலாக சளி தொந்தரவு காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், 2 நாட்களுக்கு பிறகு ராஜ் பவனுக்கு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இருப்பினும் கவர்னர் அர்லேகருக்கான சிகிச்சை விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கவர்னர் ராஜேந்திர அர்லேக்கரை முதல்-அமைச்சர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

உள்துறை மந்திரி அமித் ஷா

முன்னதாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்தான அறிக்கை கேட்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியான நிலையில், தமிழ்நாடு கவர்னர் அர்லேகர் கடந்த 13-ம் தேதி தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு குறித்தான அறிக்கையை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவிடம் வழங்கினார். அதற்காக டெல்லி சென்ற கவர்னர் அர்லேகர், மத்திய மந்திரி அமித்ஷாவுடன் சந்திப்பு, தனியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உள்ளிட்டவற்றை முடித்துக் கொண்டு கடந்த 15-ம் தேதி சென்னை திரும்பினார். இந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT