தமிழக செய்திகள்

தி.மு.க. ஆட்சியின் 5 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்- அரசாணை வெளியீடு

கடந்த மார்ச் மாதம் கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால் தேர்த்ல் நடத்தை விதிமுறைகள் காரணமாக அரசாணை வெளியிடப்பட்ட வில்லை.

சென்னை,

தமிழக சட்டசபையில் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றிய 5 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். அதில் தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை ஒழுங்குமுறை (திருத்த) சட்டம் மற்றும் தமிழ்நாடு பள்ளிகள் கட்டண வசூல் ஒழுங்குமுறை (திருத்த) சட்டம் ஆகியவை கடந்த மார்ச் மாதம் கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால் தேர்த்ல் நடத்தை விதிமுறைகள் காரணமாக அரசாணை வெளியிடப்பட்ட வில்லை. இது தவிர தமிழ்நாடு ஊராட்சிகள் (திருத்த) சட்டம், தமிழ்நாடு பிச்சையெடுப்பைத் தடுக்கும் (திருத்த) சட்டம் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (திருத்த) சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு கவர்னர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.

சிறப்பு அலுவலர்கள் பதவிக்காலம்

அதில் பள்ளிகள் கட்டண ஒழுங்குமுறை சட்டத் திருத்தத்தின்படி, கட்டண நிர்ணயக் குழுவில் தமிழ்நாடு மாநில பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு பெற்றோர் உறுப்பினராக இடம்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் 3 கல்வியாண்டுகளுக்கு செல்லுபடியாகும் வகையிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஊராட்சிகள் சட்டத் திருத்தத்தின்படி, உள்ளாட்சி அமைப்புகளின் சிறப்பு அலுவலர்களின் பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசாணை

பிச்சையெடுப்பைத் தடுக்கும் சட்டத் திருத்தத்தின் மூலம் தொழுநோயாளிகள் தொடர்பான காலாவதியான சில பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத் திருத்தத்தில், கூட்டுறவு சங்க வாரியங்களை இடைநீக்கம் செய்யும் நடைமுறைகள் மற்றும் இடைக்கால நிர்வாகி நியமனம் தொடர்பான புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த 5 சட்டங்களும், அரசாணையாக வெளியிடப்பட்டு உள்ளது.