தமிழக செய்திகள்

4 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக படிக்கப்பட்ட கவர்னர் உரை..!

2023-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை 4 முறை அவர் கவர்னர் உரையை முழுமையாக வாசிக்கவில்லை.

சென்னை,

தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் இன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. தமிழக பொறுப்பு கவர்னரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஆங்கிலத்தில் பேசினார்.

கவர்னர் ஆர்.என்.ரவி

கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி, 2022-ம் ஆண்டு சட்டசபையின் முதல் கூட்டத்தில், தனது உரையை முழுமையாக படித்தார். அரசின் அறிவிப்புகள், திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

ஆனால், 2023-ம் ஆண்டு சட்டசபை முதல் கூட்டத்தில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, தனது உரையில் இருந்த மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கருணாநிதி ஆகிய சொற்களை கூறாமல் தவிர்த்தார்.

இதனால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது எழுந்து பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு கொடுத்த உரையில் இருப்பதுதான் அவைக் குறிப்பில் ஏற்றப்படும் என்று கூற, அவையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை

தொடர்ந்து, 2024-ம் ஆண்டு சட்டசபை முதல் கூட்டத்தில் பேச வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, தனது உரைக்கு முன்னால், தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது, தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி, உரையை வாசிக்காமல் புறக்கணித்து சென்றார். ஆனாலும், கவர்னர் உரையை தமிழில் வாசித்த சபாநாயகர் அப்பாவுவின் பேச்சு அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.

தேசிய கீதம்

கடந்த ஆண்டு (2025) சட்டசபையின் முதல் கூட்டத்தில் பேச வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, முந்தைய ஆண்டில் கூறிய அதே காரணத்தை மீண்டும் எழுப்பி, அவையில் உரையை வாசிக்காமல் வெளியேறினார்.

இந்த ஆண்டு (2026) தொடக்கத்தில் நடைபெற்ற முதல் சட்டசபை கூட்டத்திலும், தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி, மீண்டும் உரையை வாசிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.

கவர்னர் உரை

இப்படி, 2023-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை 4 முறை அவர் கவர்னர் உரையை முழுமையாக வாசிக்கவில்லை. தற்போது, ஆர்.என்.ரவி மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு இன்னும் புதிய கவர்னர் நியமிக்கப்படவில்லை.

கேரள கவர்னராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் , தமிழக பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டத்தில் பேசிய அவர், தனது உரையை முழுமையாக வாசித்தார்.

SCROLL FOR NEXT