சென்னை,
சட்டம்-ஒழுங்கு, வளர்ச்சி திட்டங்கள் குறித்த கவர்னரின் ஆய்வு என்பது அதிகார வரம்பை மீறிய செயல் என்று எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் நஸ்ரூதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதுரையில் நேற்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகர், அதைத் தாண்டி வைகை ஆற்றை ஆய்வு செய்ததும், அரசு விருந்தினர் மாளிகையில் மதுரை மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோரை அழைத்து சட்டம்-ஒழுங்கு, வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு என்ற பெயரில் விசாரணை நடத்தியிருப்பதும் ஏற்புடையதல்ல.
மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள், காவல்துறை ஆய்வுகள் குறித்து ஆலோசிக்கவும், முடிவெடுக்கவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்களும், முதல்-அமைச்சரும் இருக்கிறார்கள். அவர்களை முற்றிலும் ஓரங்கட்டிவிட்டு, கவர்னர் நேரடியாக அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்துவது என்பது மக்களாட்சி மாண்புகளைக் கேலிக்குரியதாக்கும் செயலாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி கவர்னருக்கு இத்தகைய நேரடி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள எந்த அதிகாரமும் இல்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு இணையாக, இணையாட்சி நடத்த முயல்வதும், மாநில நிர்வாகத்தின் அன்றாடச் செயல்பாடுகளில் மூக்கை நுழைப்பதும் நாட்டின் அரசியலமைப்புச் சட்ட வரையறைகளை அப்பட்டமாக மீறும் செயலாகும்.
தமிழகத்தில் தொடர்ந்து கவர்னர்கள் தங்களின் அதிகார வரம்பை மீறி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கும் நோக்கில் செயல்படுவது வாடிக்கையாகிவிட்டது. கவர்னரின் இந்த அத்துமீறிய நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.