சென்னை,
கனிமங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் செப்.30-க்குள் ஜி.பி.எஸ். கருவி கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவுரையின்படி புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் பல்வேறு பணிகள் மற்றும் மாவட்ட அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்தும் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு இன்று சென்னை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை, இயக்குநரகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தின்போது கனிமங்களின் உற்பத்தி, அரசிற்கு கிடைக்கப்பெறும் வருவாய் மற்றும் அவற்றினை அதிகரிப்பதற்கான சாத்தியகூறுகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், சட்ட விரோத குவாரிகளை தடுப்பதற்கும் மற்றும் அனுமதியின்றி கனிமங்களை எடுத்துச்செல்வதை தடுக்கவும், அனைத்து கனிமங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் 30.09.2026-க்குள் ஜிபிஎஸ் கருவி கட்டயாமாக பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, நிலுவையிலுள்ள குத்தகை கோரும் விண்ணப்பங்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறும், புதிய பகுதிகளை கண்டறிந்து மின்னணு முறையில் ஏலத்திற்கு கொண்டு வந்து புதிய குவாரிகளை செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் மற்றும் செயல்பாட்டில் இல்லாத குவாரிகளை நடைமுறைக்கு கொண்டுவரவும் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் துரித நடவடிக்கை மேற்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கினை முழுமையாக எய்திடுமாறு மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இறுதியாக, முதல்-அமைச்சர் வெற்றித் தமிழகத்தினை உருவாக்கும் இலக்குகளான ஊழலற்ற வெளிப்படை தன்மையான நிர்வாகம், பொதுமக்களின் தேவைகளை தங்குதடையின்றி பூர்த்தி செய்தல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்து சிறப்பான ஆட்சியை நடத்துவதற்கு ஏதுவாக, அரசின் நலத்திட்டங்களை திறன்பட செயல்படுத்தும் பொருட்டு, அரசிற்கு வருவாயினை அதிகரிக்க, நிர்ணயிக்கப்பட்ட கனிம உற்பத்தி இலக்கினை முழுமையாக எய்திட துறையின் அலுவலர்கள் தங்களது கடமையினை உணர்ந்து பொறுப்புடன் பணிகளை மேற்கொண்டு சிறப்பாக செயல்படுமாறு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் தலைமையில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் இதர சாலை பணிகளுக்கு மண் எடுக்க அனுமதிகோரி விண்ணப்பிக்கும் ஒப்பந்ததாரர்களுடன் கலந்தாய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தின்போது மேற்படி திட்டப்பணிகளுக்கு குத்தகை அனுமதி பெறுவதில் ஏற்படும் சிரமங்கள் குறித்து கேட்டறிந்து அவற்றை களைவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இவ்வாய்வுக்கூட்டத்தில், மாநில எல்லைகளின் சோதனைச்சாவடிகளை கண்காணிக்க சிறப்புக்குழுக்களில் பணியாற்றிய அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இயற்கை வளங்கள் துறையின் அரசு முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இயக்குநர் த.பிரபுசங்கர், மற்றும் துறையின் உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.