தமிழக செய்திகள்

காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததால்.. பட்டதாரி பெண் எடுத்த விபரீத முடிவு

வாலிபரை கைது செய்யக்கோரி பெண்ணின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருக்கனூர்,

திருக்கனூர் அருகே காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் தூக்குப்போட்டு பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார். வாலிபரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

திருக்கனூர் அருகே உள்ள மண்ணாடிப்பட்டு பெரியபேட் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். விவசாய கூலித்தொழிலாளி. அவரது மகள் ஸ்ரீலேகா (வயது 23). பி.காம் பட்டதாரி. இவர் நேற்று முன் தினம் தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது பெற்றோர் திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரில் 'மண்ணாடிப்பட்டு சின்னப்பேட் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் ஸ்ரீலேகாவை பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், ஸ்ரீலேகாவை திருமணம் செய்ய மறுத்ததால் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே தற்கொலைக்கு காரணமான வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை மறியல்

இந்தநிலையில் நேற்று காலை பெண்ணின் உறவினர்கள் வாலிபரை கைது செய்யக்கோரி மண்ணாடிப்பட்டு பஸ் நிறுத்தம் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக் டர் ராஜகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போராட்டம்

அப்போது ஸ்ரீலேகாவின் தற்கொலைக்கு காரணமான வாலிபரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்வதாக போலீசார் உறுதி கூறினர். இதை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.