டாக்டர் சுந்தர்,மகேந்திரன், தீபா,மகேஷ் 
தமிழக செய்திகள்

தமிழகத்தில் ஆக. 23 முதல் ஈஷா கிராமோத்சவ போட்டிகள்: செப். 6-ல் கோவையில் மகா இறுதிப்போட்டி

விளையாட்டு திருவிழாவில் மொத்தம் ரூ.1 கோடிக்கும் மேல் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

சென்னை,

தமிழ்நாட்டில் ஆக.23-ஆம் தேதி ஈஷா கிராமோத்சவ மண்டல அளவிலான போட்டிகள் செப். 6-ஆம் தேதி சத்குரு முன்னிலையில் கோவையில் மாபெரும் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.

10 மாநிலங்கள்

சத்குருவின் ஈஷா அமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 'ஈஷா கிராமோத்சவம்', இந்தாண்டு வட மாநில கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, 10 மாநிலங்களில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

செப்டம்பர் 6 ஆம் தேதி

தமிழ்நாட்டின் 6 முக்கிய இடங்களில் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஈஷா கிராமோத்சவத்தின் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் பங்கேற்கும் மாபெரும் இறுதிப்போட்டி, வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி கோவை ஆதியோகி வளாகத்தில் சத்குரு அவர்களின் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பு

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் ஈஷா கிராமோத்சவத்தின் தன்னார்வலர்கள் பிரபல எலும்பியல் நிபுணர் டாக்டர் சுந்தர், மகேந்திரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் தீபா, வாலிபால் விளையாட்டு வீரர் மகேஷ் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

டாக்டர் சுந்தர் பேசுகையில்,

கிராமோத்சவம்

“நம் கிராமங்களில் 60 சதவீத மக்கள் உழைக்கும் வயதில் இருந்தாலும், வேலை வாய்ப்பின்மை மற்றும் நலிவடையும் விவசாயம் போன்ற காரணங்களால் இளைஞர்கள் வறுமையின் பிடியில் சிக்குவதும் போதை பழக்கங்களுக்கு அடிமையாவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேபோல், பெண்களுக்கு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு விளையாடுவதற்கான வாய்ப்புகளே இல்லாமல் போகிறது. இந்த சூழலை மாற்றி, "கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்வில் விளையாட்டை ஒர் அங்கமாக மாற்ற வேண்டும்" என்ற சத்குருவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் 'ஈஷா கிராமோத்சவம்' 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும் இளைஞர்களுக்கு உத்வேகம், பெண்கள் சுயமுன்னேற்றம், அனைத்து வயதினரும் விளையாடும் வாய்ப்பு, ஆரோக்கியம், சமூக ஒற்றுமை மற்றும் கிராமப்புறத் திறமைகளை வெளிக்கொணரும் ஒரு சிறந்த தளமாக கிராமோத்சவம் விளங்கி வருகிறது.

வாலிபால் மற்றும் த்ரோபால் போட்டிகள்

இப்போட்டி தொடரில் ஆண்களுக்கான வாலிபால் மற்றும் பெண்களுக்கான த்ரோபால் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் தொழில்முறை விளையாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. கிராமப்புறங்களை சேர்ந்த மீனவர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்கள் மட்டுமே இப்போட்டிகளில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக 5 மாநிலங்களில் போட்டி

இந்தாண்டு புதிதாக உத்தரப் பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் மராட்டியம் ஆகிய வட மாநிலங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி இணைந்து மொத்தம் 10 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன.

தமிழ்நாட்டில் சுமார் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் முதற்கட்ட கிளஸ்டர் போட்டிகள் நடைபெற்றன. இதில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆகஸ்ட் 1 மற்றும் 2 தேதிகளிலும், அதனை தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.

7,005 அணிகள்

இதில் வாலிபால் பிரிவில் 2,246 அணிகளை சேர்ந்த 26,952 வீரர்களும், த்ரோபால் பிரிவில் 31 இடங்களில் 744 அணிகளைச் சேர்ந்த 7,440 வீரர்களும் பங்கேற்றனர். இம்முதற்கட்டப் போட்டிகளில் மொத்தம் சுமார் 34,392 கிராமப்புற மக்கள் பங்கேற்று விளையாடினர். அடுத்த கட்டமாக தமிழ்நாட்டில் கோவை, சேலம், வேலூர், மதுரை, திருநெல்வேலி, கடலூர் உள்ளிட்ட 6 இடங்களில் மண்டல அளவிலானப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளன. இந்த மாபெரும் விளையாட்டு திருவிழாவில், சுமார் 7,005 அணிகள் மூலம் 40,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கிட்டத்தட்ட 20,000 பெண்கள் உட்பட 80,352 கிராமப்புற மக்கள் பங்கேற்றுள்ளனர்.

பரிசுத்தொகை

ஈஷா கிராமோத்சவம் 2026-இன் பிரம்மாண்ட இறுதிப்போட்டிகள் செப்டம்பர் 6 அன்று கோவை ஆதியோகி வளாகத்தில் சத்குரு அவர்களின் முன்னிலையில் நடைபெறும். இந்த இறுதிப் போட்டியில் வெல்லும் கைப்பந்து மற்றும் எறிபந்து அணிகளுக்கு தலா ரூ.5 லட்சமும், இரண்டாம் இடத்திற்கு ரூ.3 லட்சமும் பரிசாக வழங்கப்படும். மேலும், மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.1 லட்சமும், ரூ.50,000-மும் பரிசாக வழங்கப்படவுள்ளது.

இருசக்கர வாகனம் பரிசு

இதுமட்டுமின்றி, கிளஸ்டர் மற்றும் டிவிஷனல் போட்டிகளிலும் வெற்றியாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், “6 மண்டலங்களிலும் தேர்வு செய்யப்படும் சிறந்த பெண் த்ரோபால் வீராங்கனைகளுக்கு எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்படவுள்ளது.”

கிராமிய கலாச்சார கொண்டாட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகளுக்கு பிரத்யேகப் பரிசுகள் வழங்கப்படும். கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விளையாட்டுத் திருவிழாவில் மொத்தம் ரூ.1 கோடிக்கும் மேல் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. கிராமிய கலாச்சார கொண்டாட்டம்.

பண்பாட்டு திருவிழா

கிராமோத்சவம் என்பது வெறும் விளையாட்டு போட்டிகளோடு நின்றுவிடாமல், பாரம்பரிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், இசை, நடனம், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் கிராமத்து உணவுகள் என நம் கிராமத்து மரபுகளை முழுமையாக கொண்டாடும் பண்பாட்டு திருவிழாவாக திகழ்கிறது. அந்த வகையில், தற்போது நடைபெறவுள்ள மண்டல அளவிலான போட்டி நடைபெறும் இடங்களிலும், கோவையில் நடைபெறும் இறுதிப்போட்டி வளாகத்திலும் இத்தகைய கலை மற்றும் பண்பாட்டுக் கொண்டாட்டங்கள் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளன எனக் கூறினார்.

கவனம் செலுத்த முடியும்

தனிநபர்களையும் சமூகங்களையும் வடிவமைப்பதில் விளையாட்டின் ஆழமான பங்களிப்பு பற்றி சத்குரு கூறுகையில், “வாழ்க்கையை விளையாட்டுத்தனத்தோடு எதிர்கொள்வதே நாம் வாழ்வதற்கான ஆகச்சிறந்த பொறுப்பான வழியாகும். எப்போதும் வாடிய முகத்தோடு இந்த பூமியில் உலா வருவது முற்றிலும் பொறுப்பற்ற செயல். வாழ்க்கையில் விளையாட்டுத்தனத்தோடு இருப்பது என்பது பொறுப்பான மற்றும் சரியான செயலாற்றும் நிலையில் இருப்பதை குறிக்கிறது. நீங்கள் எப்போது விளையாட்டுத்தனத்தோடு இருக்கிறீர்களோ, அப்போதுதான் உங்களால் எல்லாவற்றின் மீதும் முழு கவனம் செலுத்த முடியும்.

பிட் இந்தியா அமைப்பின் அங்கீகாரம்

www.instagram.com/reel/DZJnYsWzCWn பிட் இந்தியா (FIT India) அமைப்பின் அங்கீகாரம் பெற்றுள்ள ஈஷா கிராமோத்சவம், இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தால் ‘தேசிய விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாக’ (NSPO) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராமப்புறங்களில் விளையாட்டை ஊக்குவித்ததற்காக 2018-ஆம் ஆண்டு ‘ராஷ்ட்ரிய கேல் ப்ரோத்சாஹன் புரஸ்கார்’ விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.” எனக் கூறினார்.