சென்னை,
தியாகராயநகரில் தாத்தா-பேத்தி ஒன்றாக தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சென்னை தியாகராயநகர், ராஜபிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 50). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயவேல். இவரின் மகள் சுகாஷினி (17), பட்டப்படிப்பு படித்து வந்தார். ஆனந்தன், சுகாஷினிக்கு உறவுக்கார தாத்தா என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுகாஷினி, தனது தாத்தா ஆனந்தன் வீட்டுக்கு வந்துள்ளார். மேலும் ஆனந்தன், சுகாஷினியிடம் அன்பாக பழகிவந்ததாக தெரிகிறது. இவர்களது பழக்கம் அக்கம்பக்கத்தினருக்கு தவறாக தெரிந்துள்ளது. இதனால் அனைவரும் தாத்தா-பேத்தி தகாத உறவில் இருப்பதாக நினைத்ததாக கூறப்படுகிறது.
மேலும் சுகாஷினியின் பெற்றோரும் அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டித்து திட்டியதாக தெரிகிறது. இதில் சுகாஷினி மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார். இதனை தாத்தா ஆனந்தன் வீட்டிற்கு வந்து அவரிடம் கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் முன்தினம் ஆனந்தனின் சகோதரர் பாண்டுரங்கன் என்பவர், சாப்பிடுவதற்காக ஆனந்தனின் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் கதவு பூட்டியிருந்தது. கதவை திறந்து உள்ளே சென்றபோது, ஆனந்தன் மற்றும் சுகாஷினி 2 பேரும் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு பாண்டுரங்கன் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பாண்டிபஜார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அக்கம்பக்கத்தினர் தவறாக நினைத்ததால், தாத்தா-பேத்தி தற்கொலை செய்துகொண்டனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் ஆனந்தன் சில நாட்களுக்கு முன்பு தற்கொலை முயற்சி செய்து, அவரை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.