தமிழக செய்திகள்

கன்னத்தில் அறைந்த போது மயங்கி விழுந்து இறந்த பாட்டி - பேரன் கைது!

இது தொடர்பாக பேரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே, மது போதையில் பாட்டியை கன்னத்தில் அறைந்ததில் அவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பேரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம் அருகேயுள்ள பூந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது 94 வயதான தாயார் சரோஜா குடும்பத்தினருடன் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக சரோஜா அடிக்கடி தனக்குத்தானே பேசிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மது போதையில்..

இந்நிலையில், நேற்று வீட்டின் வாசலில் கட்டிலில் படுத்திருந்த சரோஜாவை பார்க்க அவரது பேரன் மகேஷ் (26) வந்துள்ளார். அப்போது அவர் முழு மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது சரோஜா தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருந்ததை பார்த்த மகேஷ், “எப்போதும் ஏன் புலம்பிக்கொண்டே இருக்கிறாய்?” என ஆத்திரத்தில் கேட்டு, அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறிய சரோஜா கட்டிலிலேயே மயங்கி விழுந்துள்ளார்.

புகார்

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த அவரது இளைய மகன் ராஜி, தாயார் சரோஜாவை பரிசோதித்தபோது அவர் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சரோஜாவின் மகள் வசந்தாவின் மகன் கார்த்திக், சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மகேஷை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மது போதையில் பாட்டியை தாக்கியதை மகேஷ் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.

பேரனின் தாக்குதலால் 94 வயது மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பூந்தண்டலம் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.