தமிழக செய்திகள்

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் தாத்தா - பாட்டி தின விழா

தாத்தாக்களுக்கு சேலை மடிக்கும்போட்டி, மனைவிக்கு தலைமுடி கட்டி, முக அலங்காரம் செய்யும் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

சென்னை,

சென்னையை அடுத்த புழலில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழாவும், தாத்தா - பாட்டி தின விழாவும் கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு சென்னை வாழ் நாடார்கள் சங்க தலைவர் டி.தங்கமுத்து தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜராஜேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.

காமராஜர் கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை பொருளாளர் ராஜாமணி, முருகேசப்பாண்டியன், சங்க பொருளாளர் கே.எம்.செல்லதுரை, பொதுச் செயலாளர் ஆர்.செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உலக மகளிர் தின விழாவில் பள்ளி ஆசிரியைகள், மாணவ-மாணவிகளின் தாயார் கலந்துகொண்டு கோலாட்டம் ஆடினர். தாத்தா - பாட்டி தின விழாவில் பங்கேற்ற பெரியோர்களுக்கு 3 வகையான போட்டிகள் நடைபெற்றன. தாத்தா, பாட்டிகளுக்கு தனியாகவும், ஜோடியாகவும் போட்டிகள் நடைபெற்றன.

பழைய பாடல்களின் இசையை ஒலிக்கச் செய்து, பாடல்களை கண்டுபிடித்து பாடச் சொல்வது, தாத்தாக்களுக்கு சேலை மடிக்கும்போட்டி, மனைவிக்கு தலைமுடி கட்டி, முக அலங்காரம் செய்யும் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஆர்வமுடன் பங்கேற்று தாத்தா - பாட்டிகள் அசத்தினார்கள்.

போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் சங்க துணைத் தலைவர்கள் ஏ.சிற்றம்பலம், எம்.எம்.ராஜேந்திரநாதன், என்.செந்தில், விஜயலட்சுமி, ராஜாமணி, எஸ்.கே.முனியசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் ஆரோக்கிய செல்வி, சல்மா ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியை ஆசிரியைகள் பிரவீனா, ஜாய் ஞான புஷ்பம் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். நிறைவாக, ஆசிரியை வேளாங்கண்ணி நன்றி கூறினார்.