தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியில், காவல் நிலையம் அருகிலேயே செயல்பட்டு வந்த மளிகைக் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கழுகுமலை காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு மளிகைக் கடையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மேற்கொண்ட கண்காணிப்பில், காவல் நிலையத்திற்கு மிக அருகிலேயே உள்ள ஒரு மளிகைக் கடையில் சட்டவிரோத விற்பனை நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய திடீர் சோதனையில், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 39 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து கடை உரிமையாளரான கழுகுமலை வின்சென்ட் நகரைச் சேர்ந்த மாரியஜேம்ஸ் (45) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மளிகைப் பொருட்களுடன் சேர்த்து மது பாட்டில்களையும் சட்டவிரோதமாக விற்றதை அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.