சென்னை,
846 பணியிடங்களுக்கான குரூப்-2, 2ஏ தேர்வை 3.97 லட்சம் பேர் எழுதியுள்ளனர். ஒரு பதவிக்கு 469 பேர் போட்டியிடுகின்றனர்.
உதவி ஆய்வாளர், நன்னடத்தை அலுவலர் உள்பட குரூப்-2 பதவிகளுக்கும், தமிழ்நாடு தலைமைச் செயலக உதவியாளர், தொழிற்கூட்டுறவு சங்கங்களின் மேற்பார்வையாளர் உள்பட குரூப்-2ஏ பதவிகளுக்கும் என 846 பணியிடங்களுக்கான குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான காலி இடங்கள் அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஆகஸ்டு மாதம் வெளியிட்டது.
அதாவது குரூப்-2 பணியில் 43 இடங்கள், குரூப்-2ஏ பணியில் 803 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்தேர்வுக்கு மொத்தம் 4 லட்சத்து 89 ஆயிரத்து 897 பேர் விண்ணப்பித்தனர். இதில் 12 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து 4 லட்சத்து 89 ஆயிரத்து 885 பேர் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அந்தவகையில், குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 1,647 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணி முதலே தேர்வு மையங்கள் முன்பாக தேர்வர்கள் மிகவும் ஆர்வமுடன் குவியத் தொடங்கினர். சில இடங்களில் தேர்வு எழுத தேர்வர்கள் 9 மணிக்கு மேல் தாமதமாக வந்தனர். அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது.
சென்னையை பொறுத்தவரையில் 173 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. 51 ஆயிரத்து 721 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆண்கள் 22,384 பேர், பெண்கள் 29,333 பேர், மூன்றாம் பாலினத்தவர் 4 பேர் அடங்குவர். சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகள் 2 மாதத்தில் வெளியிடப்படும்' என தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற குரூப்-2, 2ஏ தேர்வை 3 லட்சத்து 97 ஆயிரத்து 290 பேர் மட்டுமே எழுதியுள்ளனர். அதாவது 81.10 சதவீதம் ஆகும். 92 ஆயிரத்து 595 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதாவது 18.9 சதவீதம் பேர் 'ஆப்சென்ட்' ஆகியுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, குரூப்-2, 2ஏவில் ஒரு பதவிக்கு குறைந்தபட்சம் 469 பேர் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கட் ஆப் மதிப்பெண் கள் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.