தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி II & IIA முதன்மைத் தேர்வுகள் நாளை (15.3.2026) நடைபெறவுள்ளது. இது குறித்த முன்னேற்பாடுகள் மற்றும் தேர்வர்களுக்கான அறிவுறுத்தல்கள் குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப்-2 முதன்மை தேர்வு புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முற்பகல் மற்றும் பிற்பகல் என இரு வேளைகளிலும் நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 487 விண்ணப்பதாரர்கள் பங்கேற்க உள்ளனர். தேர்விற்காகக் காவல்துறை, தீயணைப்புத் துறை, மின்சார வாரியம், கருவூலம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை ஆகியவற்றுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு எளிதாக வந்து செல்ல ஏதுவாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தேர்வர்கள் முற்பகல் 9 மணிக்கும், பிற்பகல் 2 மணிக்கும் முன்னதாகவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் வருபவர்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வு அறைக்குள் செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் (Smart Watch), பேஜர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், புத்தகங்கள், குறிப்பேடுகள் மற்றும் கைப்பைகள் கொண்டு வரக் கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு எவ்வித இடையூறுமின்றி அமைதியாக நடைபெற அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.