சென்னை,
பல லட்சம் பேர் எழுதக்கூடிய குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ள தேதியை டி.என்.பி.எஸ்.சி. இன்று (10.06.2026) வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்புகளை வெளியிட்டு அதன்படி தேர்வுகளை நடத்தி வருகிறது. குரூப்-1, 2 ஏ, 3, 4, 5 என பல்வேறு பதவிகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 2026-ம் ஆண்டில் எந்தெந்த மாதங்களில் எந்த பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியாகும் என்பது குறித்த அட்டவணை வெளியிடப்பட்டு இருந்தது. அந்த அட்டவணையில் கூறியிருந்தபடி இது வரை குரூப்- 1, 2ஏ உள்ளிட்ட சில பதவிகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு சில பதவிகளுக்கு தேர்வுகளும் நடத்தப்பட்டு இருக்கின்றன.
அந்த வரிசையில் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் எதிர்பார்த்து காத்திருக்கும் குரூப்- 4 பணியிடங்களுக்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிவிப்பு வெளியாகும் என ஆண்டு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் அக்டோபர் மாதம் தொடங்கிய சூழலில் எப்போது அறிவிப்பு வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் குரூப்-4 தேர்வர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.
இந்நிலையில் குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிப்பினை டி.என்.பி.எஸ்.சி. இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளது. இதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி குரூப் 4 தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கான காலி பணியிடங்கள் எண்ணிக்கை 6,574 என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி - 5.11.2026 ஆகும். நடப்பாண்டில் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்க வாய்ப்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-ல் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு குரூப்-4 பதவிகளில் 5 ஆயிரத்து 307 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12-ந் தேதி நடந்தது. இந்த தேர்வை எழுத 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்ததில் 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் எழுதி இருந்தார்கள்.