தமிழக செய்திகள்

பனங்கற்கண்டுக்கான ஜிஎஸ்டி வரியை 5% ஆக குறைக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

பனங்கற்கண்டுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று ஜி.எஸ்.டி ஆணையரகம் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பனங்கற்கண்டுகளில் தூய்மைப்படுத்தப்பட்ட சர்க்கரை அதிக அளவில் சேர்க்கப்பட்டிருப்பதால், அவற்றை செயற்கையாக தூய்மைப்படுத்தப்பட்ட சர்க்கரைக் கட்டிக்கு இணையான பொருளாகக் கருதி 18% விதிக்கப்படும் என்று ஜி.எஸ்.டி ஆணையரகம் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது மத்திய அரசு வகுத்திருக்கும் ஜி.எஸ்.டி வரிக்கொள்கைக்கு எதிரானது ஆகும்.

தமிழ்நாட்டில் பனைமரத்தில் இருந்து உருவாகும் பதநீரைக் கொண்டு தான் பனங்கற்கண்டு தயாரிக்கப் படுகிறது. ஜி.எஸ்.டி வரி விகிதத்தில் பனங்கற்கண்டு எச்.எஸ்.என் குறியீடு17029010 ஆக வகைப்படுத்தப் பட்டுள்ளது. இப்பிரிவில் உள்ள சில பொருள்களுக்கு 18% ஜி.எஸ்.டி வசூலிக்கப்படாலும், பனங்கற்கண்டுக்கு 5% மட்டுமே வரி வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் பனங்கற்கண்டை எச்.எஸ்.என் குறியீடு17029090 ஆக வகைப்படுத்தியுள்ள சென்னை ஜி.எஸ்.டி ஆணையரகம், இனிமேல் பனங்கற்கண்டுக்கு 18% வரி செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறது. இது அநீதியானதாகும்.

பனங்கற்கண்டை எச்.எஸ்.என் குறியீடு 17029090&இல் வகைப்படுத்துவதற்காக ஜி.எஸ்.டி ஆணையரகம் கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. பனங்கற்கண்டில் 99% சர்க்கரை இருப்பதாகவும், அது செயற்கையாக சேர்க்கப்பட்டிருக்கக் கூடும் என்றும், அதனால் அவற்றுக்கு 18% வரி தான் விதிக்க முடியும் என்று ஜி.எஸ்.டி ஆணையரகம் தெரிவித்திருக்கிறது. உண்மையில் பனங்கற்கண்டில் சர்க்கரை வெளியில் இருந்து சேர்க்கப் படுவதில்லை; மாறாக பதநீரில் உள்ள சர்க்கரை தான் பனங்கற்கண்டிலும் உள்ளது. ஆனால், இந்த வாதத்தை ஏற்க மறுக்கும் ஜி.எஸ்.டி ஆணையரகம், ‘‘பதநீரில் இருக்கும் சர்க்கரை தான் பனங்கற்கண்டிலும் உள்ளது என்றால், பதநீர் கொள்முதல் செய்யப்பட்டதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று ஆணையிடுகிறது. இது பனங்கற்கண்டு உற்பத்தி குறித்த புரிதல் இல்லாததால் செய்யப்படும் வாதமாகும்.

தமிழ்நாட்டில் எவரும் பதநீரை வெளியிலிருந்து வாங்கி, அதைக் கொண்டு பனங்கற்கண்டை உற்பத்தி செய்வதில்லை. மாறாக, அனைவருமே அவர்களுக்கு சொந்தமான பனைத் தோப்பிலிருந்து தான் பதநீர் இறக்கி பனங்கற்கண்டு தயாரிக்கிறார்கள். அப்படி இறக்கப்படும் பதநீருக்கு கொள்முதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய முடியாது; மாறாக, பனந்தோப்புக்கான நில ஆவணங்களை தாக்கல் செய்தாலே போதுமானது. இதை சென்னை உயர்நீதிமன்றமே உறுதி செய்திருக்கும் போதிலும், அதை ஏற்க மறுத்து பனங்கற்கண்டுக்கு 18% வரி செலுத்த வேண்டும் என ஜி.எஸ்.டி ஆணையரகம் கட்டாயப்படுத்துவது எந்த வகையிலும் நியாயமல்ல.

பனங்கற்கண்டில் எத்தனை விழுக்காடு சக்கரை இருந்தாலும் அது பனங்கற்கண்டின் தன்மையை மாற்றாது; ஒரு பொருள் என்ன பெயரில் அழைக்கப்படுகிறதோ, அந்த பொருளுக்கு உரிய வரி தான் வசூலிக்கப்பட வேண்டும் என்று பல உயர்நீதிமன்றங்களும், தீர்ப்பாயங்களும் கூறியுள்ளன. மேலும் எச்.எஸ்.என் குறியீடு 17029010&இல் வகைப்படுத்தப்பட்டுள்ள பொருளுக்கு இன்னொரு வகைப்பாட்டில் உள்ள வரியை வசூலிக்கக் கூடாது என்று மத்திய அரசும், நீதிமன்றங்களும் கூறியிருக்கின்றன. இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் பனங்கற்கண்டை செயற்கையாக சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக் கொண்ட பொருள் என வகைப்படுத்தி அதற்கு 18% வரி செலுத்தக் கட்டாயப்படுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.

பனங்கற்கண்டு உற்பத்தி பெரிய அளவில் முதலீடு கொண்ட தொழில் அல்ல. மிகக்குறைந்த முதலீட்டில் செய்யப்படும் குடிசைத் தொழில் தான் அதுவாகும். பிற சர்க்கரைப் பொருள்களுக்கு இருப்பதைப் போன்ற பெரிய சந்தையும் பனங்கற்கண்டுக்கு இல்லை. கிட்டத்தட்ட மருத்துவ குணம் கொண்ட பொருளாகவே பனங்கற்கண்டு கருதப்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது பனங்கற்கண்டுக்கு 18% வரி விதிக்கப்பட்டால் அதன் விற்பனை கடுமையாக பாதிக்கப்படும். அத்தகைய சூழலில் பனங்கற்கண்டு உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஈடுபடும் உழவர்களும், வணிகர்களும் பனைத் தொழில் இருந்து விலகும் நிலை உருவாகும். அது பனைத்தொழிலுக்கும், அதை வாழ்வாதாரமாகக் கொண்டிருப்போருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பனைத்தொழில் மற்றும் அதில் ஈடுபட்டிருப்போரின் பின்னணி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தான் பனங்கற்கண்டுக்கு 5% ஜி.எஸ்.டி வரி விதித்து மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. அதை மாற்றும் செயலில் ஜி.எஸ்.டி அதிகாரிகள் ஈடுபடக்கூடாது. எனவே, பனங்கற்கண்டை எச்.எஸ்.என் குறியீடு 17029090&இல் வகைப்படுத்தும் ஆணையை திரும்பப் பெற்று, அதை எச்.எஸ்.என் குறியீடு 17029010&இல் தொடர்ந்து நீடிக்கச் செய்யும் வகையில் ஜி.எஸ்.டி ஆணையரகம் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.