தமிழக செய்திகள்

கூடலூர்: தனியார் எஸ்டேட்டில் காட்டு யானை தாக்கி ஆதிவாசி பெண் பலி

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா நாடுகாணி பகுதியில் பாண்டியாறு- புன்னம்புழா ஆறு கேரளம் நோக்கி பாய்கிறது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா நாடுகாணி பகுதியில் பாண்டியாறு- புன்னம்புழா ஆறு கேரளம் நோக்கி பாய்கிறது. அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் புகலிடமாக இருப்பதாலும் இந்த பகுதிக்குள் பொதுமக்கள் நுழைய வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர். இருப்பினும் இரு மாநிலத்தைச் சேர்ந்த பலர் தடையை மீறி ஆற்றில் மீன் பிடித்தல், குளித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கீழ்நாடுகாணி புன்னம்புழா ஆற்றின் கரையோரம் தனியார் எஸ்டேட் பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் பலியானதாக பந்தலூர் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனத்துறையினர் இரவில் புன்னம் புழா ஆற்றின் கரையோரம் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் எஸ்டேட் பகுதியில் விசாரணை நடத்தியபோது. ஆயிரம் ஏக்கர் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் தேவாலா அட்டி தேக்கம்பாடியைச் சேர்ந்த கும்பிளி, அவரது மனைவி மீனாட்சி(வயது 50) மற்றும் உறவினர் மணி ஆகிய 3 பேரும் மீன் பிடிக்க சென்றது தெரியவந்தது. இரவில் அவர்கள் ஆற்றில் மீன் பிடித்து விட்டு எஸ்டேட் பகுதியில் உள்ள கொட்டகையில் தங்குவதற்காக இருளில் அடர்ந்த வனப்பகுதி வழியாக நடந்து வந்துள்ளனர். அப்போது அங்கு நின்றிருந்த காட்டு யானை திடீரென கும்பிளி, மீனாட்சி, மணி ஆகியோரை துரத்தியது. இதில் மீனாட்சி மட்டும் காட்டு யானையிடம் சிக்கி கொண்டார். காட்டு யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது தெரியவந்தது.