தமிழக செய்திகள்

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...!

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா உலக அளவில் புகழ் பெற்றது. இந்த திருவிழாவில் வேலூர் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ,கேரளா ,தெலுங்கானா பாண்டிச்சேரி மற்றும் வட இந்திய மாநிலங்கள், சிங்கப்பூர், மலேசியா இலங்கை, நேபாளம், மாலத்தீவுகள் உள்ளிட்ட பல வெளிநாடுகளிலிருந்தும் கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் கலந்து கொள்வார்கள் .

இந்த கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள். வேலூர் மாவட்டத்தில் விடுமுறை அளிக்கப்பட்ட ஒரே திருவிழா கெங்கை அம்மன் சிரசு திருவிழா மட்டுமே .

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் 16-ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும் அதனைத் தொடர்ந்து சித்திரை மாதம் கடைசி நாள் தேரோட்டமும், வைகாசி ஒன்றாம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடைபெறும்.

அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் இருந்ததால் 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் கெங்கையம்மன் தேர்த் திருவிழாவும் சிரசு திருவிழாவும் கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது . இதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கியதால் தேர்த்திருவிழா கெங்கையம்மன் சிரசு திருவிழா நடத்த சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் தேர்த் திருவிழாவில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று காலையில் அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது. அதிகாலையில் முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்து நீலிகோவிந்தப்ப செட்டிதெரு, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் மிதந்த கோவிலை சென்றடைந்தது. வழிநெடுகிலும் நேர்த்திக்கடனாக பக்தர்கள் லட்சக்கணக்கான தேங்காய்களை உடைத்தனர்.

திரும்பும் திசையெல்லாம் வீடுகளிலும், மாடிகளிலும், சாலைகளிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் வெள்ளத்தால் சூழ்ந்து இருந்தது. அம்மன் சிரசு ஊர்வலம் வரும்போது வழிநெடுகிலும் பூ மாலை அணிவிக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்தனர்.

ஊர்வலமாக பக்தர் வெள்ளத்தில் மிதந்து சென்ற கெங்கையம்மன் சிரசு கோவிலை வந்தடைந்ததும். சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவிலில் அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மாலையில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி, குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் ஜெயா, கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, ஊர் நாட்டாண்மை ஆர்.ஜி. சம்பத், கௌரவ தர்மகத்தா கே.பிச்சாண்டி உள்பட விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.