தமிழக செய்திகள்

தூத்துக்குடி உப்பு தொழிலை முடக்கும் குஜராத் உப்பு; என்ன காரணம்...?

தூத்துக்குடி உப்புக்கு தனிப்பெருமை உண்டு.

சென்னை,

தூத்துக்குடி உப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவைகளில் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் தான் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலங்கள் ஆகும். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடிவடையும்.

போதிய விலை இல்லை

நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்ய வில்லை. இதனால் ஜனவரி மாதம் முதல் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கின. தொடர்ந்து புதிய உப்பு உற்பத்தியாகி வந்தது. இடையிடையே பெய்த லேசான மழையால் உற்பத்தி சிறிது பாதிக்கப்பட்டாலும், தொடர்ச்சியாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் உப்பு உற்பத்தி வேகம் எடுத்துள்ளது. இதுவரை சுமார் 50 சதவீதம் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் உப்பு உற்பத்தி அதிகரித்தாலும் போதிய விலை கிடைக்காமல் உற்பத்தியாளர்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். கடந்த ஆண்டு உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டபோது, பல நிறுவனங்கள் குஜராத்தில் இருந்து உப்பை வாங்கி விற்பனை செய்தனர். அதன்பிறகு உற்பத்தி அதிகரித்தபோது, போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் பெரும்பாலான உற்பத்தியாளர்கள் உப்பை குறைந்த விலைக்கு விற்பனை செய்யாமல் இருப்பு வைத்தனர். அந்த உப்புக் குவியல்களை இன்றும் பார்க்க முடிகிறது.

குஜராத் உப்பு வருகை

இந்த நிலையில் புதிய உப்பும் அதிகளவில் உற்பத்தியாகி வருகிறது. தென்மேற்கு பருவமழையின் தாக்கம் எதுவும் இல்லாததால் உப்பு உற்பத்திக்கு உகந்த காலநிலை நீடித்து வருகிறது. இதனால் உப்பு விலை கடுமையாக சரிந்து உள்ளது. இந்த நிலையில் குஜராத்தில் இருந்து தொடர்ந்து தூத்துக்குடியை நோக்கி உப்பை ஏற்றிக் கொண்டு கப்பல்கள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது மேட்டூரில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து 34 ஆயிரத்து 427 டன் உப்பு கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு வந்து உள்ளது.

அதே நேரத்தில் தூத்துக்குடியில் உப்பு அதிகளவில் உற்பத்தியானதால் விலை குறைவாக உள்ளது. அதைவிடவும் குறைந்த விலையில் குஜராத்தில் இருந்து உப்பு விற்பனைக்கு வருவதால் தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்களின் கூலி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு ஆகியவற்றால் உப்பு விலையை ஓரளவுக்கு மேல் குறைக்க முடியாத நிலையில் உள்ளனர். இதனை சாதகமாக்கி, குஜராத் உப்பு தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வந்து கொண்டிருக்கிறது.

நலிவடையும் தொழில்

இதுகுறித்து உப்பு வியாபாரி ஒருவர் கூறும்போது, "தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட உப்பு இன்னும் விற்பனை செய்யப்படாமல் உள்ளது. கடந்த ஆண்டு உப்பு பற்றாக்குறை காரணமாக குஜராத்தில் இருந்து உப்பு கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு நேரடி யாக உப்பு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த மார்க்கெட்டை தூத்துக்குடி வியாபாரிகள் இழந்து உள்ளனர்.

குஜராத்தில் இருந்து நேரடியாக ரெயில் மூலம் கர்நாடகா, ஆந்திராவுக்கும், கன்டெய்னர்களில் கொச்சி துறைமுகம் மூலம் கேரளாவுக்கும் உப்பு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். தற்போது தமிழகத்தின் மார்க்கெட்டையும் தூத்துக்குடி உப்பு குறி வைத்து வருகிறது. தூத்துக்குடியில் தற்போது ஒரு டன் முதல் ரக உப்பு ரூ.1,200 முதல் ரூ.1,400 வரையும், 2-வது ரக உப்பு ரூ.900 முதல் ரூ.1,000 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

மார்க்கெட்டை இழந்துள்ளது

தூத்துக்குடி உப்புக்கு தனிப்பெருமை உண்டு. இந்த உப்பு பால் வெண்மையாகவும், எளிதில் கரையக்கூடியதாகவும் இருக்கும். இதனால் சிறப்பிடம் பெற்று இருந்த உப்பு தற்போது விற்பனை வாய்ப்பை இழந்து வருகிறது. குஜராத்தில் ஒரு டன் முதல்தர உப்பு ரூ.400 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உப்பை கப்பல் மூலம் கொண்டு வந்து விற்பனை செய்தாலும், குறைந்த விலையிலேயே கொடுக்க முடிகிறது.

இதனால் தொழிற்சாலைகள் போன்ற பெரிய நிறுவன வாடிக்கையாளர்கள் குஜராத் உப்பை வாங்கத் தொடங்கி விட்டனர். இதன்காரணமாக தூத்துக்குடி உப்பு, மார்க்கெட்டை இழந்துள்ளது. உப்பு உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் உப்புத்தொழில் நலிவடைந்து வருகிறது. எனவே, அரசு சலுகைகளை வழங்கி உப்புத் தொழிலை பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.