தமிழக செய்திகள்

வளைகுடா போர் எதிரொலி: திருப்பூரில் ரூ.100 கோடி காடா ஜவுளி துணிகள் தேக்கம்

நூல் விலை உயர்வால், ஜவுளித்துணி விலை உயர்வு கட்டாயமாகிறது.

திருப்பூர்,

திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

ஜவுளித் தொழிலில் விசைத்தறி துணி உற்பத்தி மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் தான் அதிகமான விசைத்தறி ஜவுளி உற்பத்தி நடைபெறுகிறது.

காடா துணி உற்பத்தியை பொறுத்தவரை திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், அவினாசி, மங்கலம் உள்ளிட்ட இடங்களிலும், கோவை மாவட்டத் தில் சோமனூர் பகுதியும், அதிக அளவில் உற்பத்தி செய்யும் மையங்களாக உள்ளன. ஆனால், நூல் விலைஉயர்வு. பஞ்சு ஏற்றுமதி, ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த துணிக்கு உரிய விலை கிடைக்காதது என பல்வேறு பிரச்சினைகளால் விசைத்தறி ஜவுளித்தொழில் நலிவடைந்து உள்ளது.

இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக நூல் விலை சுமார் 20 முதல் 25 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் ஜவுளி துணி விலை உயரவில்லை. விலை உயர்வால், ஜவுளி துணிகளை வியாபாரிகள் வாங்காததால், பல்லடம் பகுதியில் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளது.

மேலும் வளைகுடா போர் காரணமாக வெளிநாட்டு வியாபாரிகள் ஜவுளிகள் இறக்குமதி செய்வதில்லை. இதனால் உற்பத்தி செய்த ஜவுளி துணியை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நூல் விலை உயர்வுக்கு காரணமான கழிவுப்பஞ்சு விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். கழிவு பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நூல் விலை உயர்வால், ஜவுளித்துணி விலை உயர்வு கட்டாயமாகிறது. ஆனால் உலகளாவிய வியாபாரத்தில் வெளிநாட்டு வியாபாரிகள் இந்திய ஜவுளி சந்தையில் விலை அதிகம் என புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜவுளி தொழில் கூலி அடிப்படையில் நடந்து வரும் தொழிலாகும். இதில் ரொக்கப் பரிவர்த்தனை தான் பெரும்பாலும் நடந்து வருகிறது.

தேர்தல் கட்டுப்பாடுகளால் தற்போது பணப்பரிவர்த்தனை குறைந்துள்ளது. மேலும் இந்த மாதம் ஆண்டுக் கணக்கு முடிவு என்பதாலும், புதிய துணி ஆர்டர்கள் வருவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த காரணங்களால், காடா ஜவுளித்துணி விற்பனை பாதிக்கப்பட்டு, துணிகள் தேக்கமடைய தொடங்கி உள்ளது. எனவே கழிவுப்பஞ்சு விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என ஜவுளி உற்பத்தியாளர் ஒருவர் கூறினார்.