சென்னை,
எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பக்ரீத் பெருநாள் அன்று எருது, காளை உள்ளிட்ட கால்நடைகளை அரசு அனுமதியுள்ள பதிவு செய்யப்பட்ட இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் பலியிடுவதற்கு உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவு, இஸ்லாமியப் பெருமக்களின் சமய உரிமைகளைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், தொன்றுதொட்டு விலங்குகளைப் பலியிட்டு வழிபடும் வழக்கம் கொண்ட தமிழகத்தின் ஒட்டுமொத்தப் பூர்வகுடி சமூகங்களின் பாரம்பரிய வழிபாட்டு உரிமைகளுக்கும் முற்றிலும் எதிரானதாகும்.
இந்துத்துவ ஆதரவாளரால் தொடரப்பட்ட இந்த வழக்கில், பக்ரீத் பண்டிகையின் முதல் நாள் அன்று மாலை இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது, இது தற்செயலாக நடந்த ஒன்றல்ல என்பதை உணர்த்துகிறது. பண்டிகை காலத்தையும், அதற்குப் பிந்தைய சூழலையும் இலக்கு வைத்து இத்தடை அமலாக்கப்படுவது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் ஆபத்தான போக்காகும். இந்த விவகாரத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டிய சட்டப் பொறுப்பு இருந்தும், தமிழக அரசு காலம் தாழ்த்துவது சமூகத்தில் தேவையற்ற பதற்றத்திற்கே வழிவகுக்கும்.
நீதியரசர் அவர்களின் உத்தரவின்படி, அரசு அனுமதி பெற்ற இடங்களைத் தவிர பொது இடங்கள், வழிபாட்டுத் தலங்கள் மட்டுமின்றி, தனி நபர்களின் சொந்த இடங்களிலும் மாடு உள்ளிட்ட எந்தவொரு கால்நடையையும் பலியிடக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இத்தகைய உத்தரவு, இஸ்லாமியர்களின் 'குர்பானி' கடமையை முடக்குவது மட்டுமல்லாமல், தமிழகக் கிராமப்புறங்களில் உள்ள சிறுதெய்வ வழிபாட்டுச் சடங்குகளையும், அனைத்து சமூக மக்களின் பாரம்பரிய உரிமைகளையும் நேரடியாகப் பாதிக்கும். இத்தகைய ஆபத்தான தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், தமிழக அரசு இதுவரை மேல்முறையீடு செய்யாமல் மௌனம் காப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி, வடமாநிலங்களைப் போலத் தமிழகத்திலும் ஒரு பதற்றமான சூழலை உருவாக்க இந்துத்துவ அமைப்புகள் முயன்றுள்ளன. அதன் விளைவாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குர்பானி கொடுப்பதற்குத் தடைகள் ஏற்படுத்தப்பட்ட நிகழ்வுகளும், இந்துத்துவ அமைப்புகளுடன் இணைந்து காவல்துறை மாடுகளைப் பறிமுதல் செய்த கண்டனத்திற்குரிய நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. காவல்துறையின் கண்காணிப்பை மீறி, இத்தகைய கும்பல்கள் மாடுகளைக் கைப்பற்றும் அத்துமீறல்களில் ஈடுபடுவதும், சமூகப் பதற்றத்தை உருவாக்குவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் உருவான போதிலும், தமிழக அரசோ அல்லது தமிழக முதல்-அமைச்சரோ இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காப்பது சரியல்ல. முக்கியமாக, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காப்பது ஏமாற்றமளிக்கிறது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சமூக நீதித்துறை அமைச்சரும் தங்களுக்குரிய பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வரும் வேளையில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் துறை சார்ந்த எவ்வித பணிகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது. இந்த விவகாரத்தில் அச்சத்தில் இருக்கும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்குத் தைரியம் அளிக்கும் வகையிலான உடனடி ஆறுதல் நடவடிக்கைகளை அவர் அரசுடன் இணைந்து மேற்கொண்டிருக்க வேண்டும். எனவே, இந்த குர்பானி தடை உத்தரவு விவகாரத்தில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உயர்நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவு வெறும் முஸ்லிம்களுக்கானது மட்டுமல்ல; இது கால்நடைகளை பலியிடும் பாரம்பரிய வழக்கம் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் எதிரானது என்பதால், தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். இதன் மூலம், தமிழகத்தில் பாரம்பரியமாக நிகழ்ந்து வரும் மதச் சடங்குகளையும், பண்டிகை கால வழிபாட்டு உரிமைகளையும் மக்கள் வழக்கம்போல அச்சமின்றித் தொடர்வதை அரசு உறுதி செய்திட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.