சென்னை,
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக எம்.பி., கனிமொழி பங்கேற்றார்.
போராட்டத்தில் அவர் பேசியதாவது:-
நாட்டில் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டியது அனைத்துமே கண்துடைப்பாக இருக்கிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்வு செய்யும் விவகாரத்தில் பாஜக சார்பில் இருவர், எதிர்க்கட்சித் தலைவர் இடம்பெறுகிறார். இதில் இருவர் எடுக்கும் முடிவே இறுதியானது. பாஜக சார்பில் இருவர் தேர்வு செய்யும் நபரே தலைமைத் தேர்தல் ஆணையர்.
ஏதாவது ஒரு பிரச்னை நடக்கும்போது இந்த நாட்டின் உயர் நிலையில் இருப்பவர்கள் எதுவும் பேசமாட்டார்கள். அனைத்தும் நடந்துமுடிந்த பிறகு தான் பேசுவார்கள். எஸ்.ஐ.ஆர். நடைமுறையால் 13 கோடி குடிமக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறித்திருக்கிறார்கள். 74 லட்சம் பேர் வாக்களிக்கும் உரிமையை இழந்திருக்கிறார்கள். யாருக்கெல்லாம் உரிமை மறுக்கப்பட்டு இருக்கிறதோ அதை எல்லாம் மீட்டுத் தர தான் இந்த போராட்டம் என்று கூறினார்.
அதனை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "எல்லாம் முடிந்துவிட்டது ஞானேஷ் ப்ரோ" என்று பதிவிட்டுள்ளார். மேலும் தேசியக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.