சேலம்,
சேலம் அருகே ஜிம் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லையால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் அருகில் உள்ள ஐயர்காட்டை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 40). இவர் மாசிநாயக்கன்பட்டி மூப்பனார் கோவில் அருகே உடற்பயிற்சி கூடம் நடத்தி, பயிற்சியாளராக இருந்து வந்தார். மேலும், அவர் ராம்நகர் பகுதியில் கிரிக்கெட் பயிற்சி செய்வதற்கான டர்ப் பயிற்சி ஆடுகளம் அமைத்துள்ளார். இவர் முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துப் பெற்றுக் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, ஊட்டியை சேர்ந்த கீதா என்பவரை முத்துசாமி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முத்துசாமி தொழில் நிமித்தமாக பலரிடம் பல லட்ச ரூபாய் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை.
நேற்று முன்தினம் காலை, முத்துசாமி தனது தம்பி கண்ணனை தொலைபேசியில் தொடர்புகொண்டு, "நன்றாக வாழ வேண்டும்" என்று அறிவுரை கூறினார். நேற்று காலை, முத்துசாமி ஏரிக்காடு ஏரிப் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஏரிப் பகுதி வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அவர்கள் காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் முத்துசாமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், கடன் தொல்லையால் முத்துசாமி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.