தமிழக செய்திகள்

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை பாராட்டிய எச்.ராஜா

பா.ஜனதா சார்பில் ஜனநாயகத்தை காப்போம் தேச துரோகிகளின் ஆதிக்கத்தை ஒழிப்போம் என்ற தலைப்பில் ஊர்வலம் வேலூரில் நேற்று நடைபெற்றது.

வேலூர்,

வேலூர் பெருங்கோட்ட பா.ஜனதா சார்பில் ஜனநாயகத்தை காப்போம் தேச துரோகிகளின் ஆதிக்கத்தை ஒழிப்போம் என்ற தலைப்பில் ஊர்வலம் வேலூரில் நேற்று நடைபெற்றது. வேலூர் மாவட்ட பா.ஜனதா தலைவர் தசரதன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி, மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மாநில செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா, மாநில இணை பொறுப்பாளர் அருணா எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். வேலூர் நேஷ்னல் சிக்னல் பகுதியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் மக்கான் சிக்னல், பழைய பஸ் நிலையம் வழியாக சென்று அண்ணா கலையரங்கம் அருகே நிறைவடைந்தது.

முன்னதாக எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது. பிறமதங்களை சேர்ந்தவர்கள் இந்து கோவில்களுக்குள் செல்லும் போது இந்து அடையாளங்களுடன் தான் செல்ல வேண்டும். எஸ்.ஐ.ஆர். மூலம் நீக்கப்பட்டதாக ஒருவர் கூட புகார் தெரிவிக்கவில்லை. ஆனால் எதிர்கட்சிகள் தேவையின்றி போராட்டம் செய்கிறார்கள்.

தி.மு.க. பொதுச்செயலாளர் இல்ல திருமண விழாவில் இந்து வேத மந்திரங்கள் முழங்க திருமணம் நடந்தது புதிது இல்லை. அவரின் வீட்டில் இதற்கு முன்பு ஹோமம் வளர்த்துள்ளார்கள். தி.மு.க.வில் உள்ள தலைவர்கள் தங்கள் வீட் டில் இந்து முறைப்படி நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளனர். அதன் பின்னர் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை அழைப்பது பழக்கம். ஓட்டுக்கு பயந்து இந்து வேஷம் போட்டாலும் சரி, அல்லது உள்மனதில் இந்துவாக இருந்து செயல்பட்டாலும் சரி அது வரவேற்கத்தக்கது. தனது பேத்திக்கு இந்து முறைப்படி திருமணம் நடத்திய தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு வாழ்த்துகள்; பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT