தமிழக செய்திகள்

காட்டுப்பகுதியில் அரை நிர்வாண நிலையில் இளம்பெண் பிணம்.. பலாத்காரம் செய்து கொலையா? கோவையில் அதிர்ச்சி

மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால், அதில் காயங்கள் எதுவும் இருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

போத்தனூர்,

கோவை அருகே காட்டுப்பகுதியில் நிர்வாண நிலையில் இளம்பெண் பிணமாக மீட்கப்பட்டார். அவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் சுகுணாபுரம் அருகே மேற்கு புறவழிச்சாலை செல்கிறது. இதன் அருகே உள்ள காட் டுப்பகுதியில் புதரில் இளம்பெண் அரை நிர்வாணநிலையில் பிணமாக கிடப்பதாக குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோவை மாநகர தெற்கு துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்குள்ள மஞ்சுப்பள்ளம் என்ற காட்டுப்பகுதியில் ஒரு புதருக்குள் நிர்வாண நிலையில் இளம்பெண்ணின் பிணம் கிடந்தது.

உடனே போலீசார் அந்த பிணத்தை மீட்டனர். மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால், அதில் காயங்கள் எதுவும் இருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் மோப்பநாய் மற்றும் கைவிரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய், அங்கிருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று மீண்டும் திரும்பி வந்தது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைவிரல் ரேகை நிபுணர்கள் அந்த இளம்பெண்ணின் உடலில் ஏதாவது கைவிரல் ரேகைகள் பதிவாகி இருக்கிறதா? என்று ஆய்வு செய்தனர்.

பின்னர் போலீசார் அந்த இளம்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த இளம்பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?. அவர் எப்படி உயிரிழந்தார்? என்பதும் தெரியவில்லை.

அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்ததால் யாரேனும் பாலியல் பலாத்காரம் செய்து கொன்று உடலை காட்டுப்பகுதியில் வீசிச்சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த இடம், மதுக்கரை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்டது என்பதால் இந்த வழக்கு மதுக்கரை போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

பிணமாக கிடந்த இளம்பெண்ணின் ஒரு கையில் 'ஜெகன்' என்றும், அதன் அருகே இதய வடிவமும் பச்சை குத்தப்பட்டு இருந்தது. மற்றொரு கையில் 'எஸ்', 'ஜெ' என்ற எழுத்துகளும் இருந்தது. அவருக்கு 25 வயது இருக்கலாம்.

அந்த பெண் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்ததால் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. எனினும், பிரேத பரிசோதனை முடிவில்தான் முழு விவரமும் தெரியவரும். இந்த வழக்கு குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.