தமிழக செய்திகள்

கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்ப்பதா? - விஜய் அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவை முதல்-அமைச்சர் விஜய் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னை,

ரூ.25,000 கோடி மதிப்பிலான திருக்கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்ப்பதா? - ஜோசப் விஜய் அரசுக்கு கண்டனம்! இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

அதிர்ச்சியளிக்கிறது

தமிழ்நாட்டில் புதிதாக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்யின் தவெக அரசு, ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே ஆலய சொத்துகளை சூறையாட தொடங்கி தங்களின் உண்மை முகத்தை காட்டியுள்ளது. கரூரில் உள்ள 4 முக்கிய கோவில்களுக்கு சொந்தமான ரூ.25,000 கோடி மதிப்பிலான 3,085 ஏக்கர் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்கும் நோக்கில் அவற்றின் மீதான பத்திரப்பதிவு தடையை இந்து சமய அறநிலையத்துறை நீக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அசாதாரண வேகம்

குறிப்பாக, நேற்று காலையில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது பரிந்துரை கடிதத்தை அனுப்புகிறார்; அதே நாளில் திருப்பூர் இணை ஆணையரின் பரிந்துரை குறிப்பும் வருகிறது; அதே ஜூலை 9-ஆம் தேதியன்றே சென்னையிலுள்ள ஆணையரும் மின்னல் வேகத்தில் தனது இறுதி உத்தரவை பிறப்பிக்கிறார்.

ஒரே நாளில் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள மூன்று முக்கிய அரசு துறைகள் இவ்வளவு அசுர வேகத்தில் கோப்புகளை நகர்த்தி இறுதி உத்தரவை வெளியிட்டதன் பின்னணி என்ன? கோவில் நிலங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதில் காட்டும் இந்த அசாதாரண வேகத்தை, மக்கள் நல பணிகளிலும் ஏழை எளிய மக்களின் தேவைகளிலும் இந்த தவெக அரசு காட்ட மறுப்பது ஏன்?

இமாலய துரோகம்

ஆக, கோவில்களின் சொத்துகளை காப்பதாக கூறிக்கொண்டே ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணைபோகிறார் அமைச்சர் ரமோஷ். முந்தைய திமுக ஆட்சியில் கூட அரங்கேறாத இந்த இமாலய துரோகத்தை, ஆன்மீக போர்வையில் வந்துள்ள ஜோசப் விஜய் அரசு மிக துணிச்சலாக செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

எனவே, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில் உட்பட 4 கோவில்களின் 3,085 ஏக்கர் நிலங்களின் மீதான பத்திரப்பதிவு தடையை நீக்க ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவை முதல்-அமைச்சர் விஜய் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.